Published : 16 Jun 2016 11:59 AM
Last Updated : 16 Jun 2016 11:59 AM
மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவை சிம்ஹஸ்த கும்பமேளா என அழைக்கிறார்கள். இவ்விழா வைகாசி மாதத்தில் நடக்கும். சூரியனும் சந்திரனும் மேஷ ராசியிலும் வியாழன் சிம்ம ராசியிலும் மற்ற கோள்கள் எல்லாம் துலா ராசியிலும் உள்ள சமயமே கும்பமேளா காலம் எனப்படுகிறது.
இந்த ஆண்டு உஜ்ஜயினியில் நடந்த சிம்ஹஸ்த கும்பமேளாவில் பிரம்மாண்டமான அளவில் பக்தர்கள் கூடினார்கள். அங்கே காணப்பட்ட காட்சிகளும் எழுந்த ஒலிகளும் அற்புதமான அனுபவங்களைத் தந்தன.
சிம்ஹஸ்த கும்பமேளாவின் வேர் ‘சமுத்திர மதனம்’ என்று சொல்லப்படும் புராணக் கதையில் உள்ளது. அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். அந்தக் கடைசலில் பல்வேறு பொருள்கள் வந்தன. அதன் பிறகு ஆலகால விஷம் வந்தது. அனைவரும் அதைக் கண்டு அஞ்சி நடுங்கியபோது சிவபெருமான் அந்த விஷத்தைக் குடித்து தேவர்களையும் அசுரர்களையும் ஆற்றுப்படுத்தினார்.
அதன் பிறகு திரண்டு வந்த அமுதத்தை எடுத்துக்கொள்ள தேவாசுரர்களுக்கிடையே போட்டி நடைபெற்றது. அமுதம் நிரம்பிய குடத்தைத் தூக்கிக் கொண்டு சிலர் ஓடியபோது அமுதத்தின் துளிகள் ஹரித்வார், பிரயாகை, நாசிக், உஜ்ஜயினி ஆகிய நான்கு இடங்களில் சிதறின. கும்பத்திலிருந்து (குடம்) அமுதம் சிந்திய இந்த இடங்களில் அதைக் கொண்டாடும் விதமாகக் கும்பமேளா நடைபெறுகிறது.
18-ம் நூற்றாண்டில் மாராட்டிய அரசை ஆண்ட ரானோஜி ஷிண்டே நாசிக்கிலிருந்து துறவிகளை உஜ்ஜயினிக்கு அழைத்தார். அதிலிருந்துதான் உஜ்ஜயினியில் கும்ப மேளா கொண்டாட்டம் நடைபெறுகிறது. சித்ரா பவுர்னமியன்று பக்தர்கள் ஷிர்பா நதியில் குளிப்பார்கள். அடுத்த மாதத்தின் பவுர்ணமி வரையிலும் இந்த விழா தொடரும். இந்த ஆண்டு ஏழரைக் கோடிப் பேர் உஜ்ஜயினி மேளாவில் கலந்துகொண்டார்கள்.
நவீன காலத்திலும் அறுபடாத இந்தியாவின் வளமான ஆன்மிக மற்றும் துறவுக் கலாசாரத்தின் வண்ணமிக்க கோலங்கள் இவை.
சாம்பலையே ஆடையாகப் போர்த்திய சீடர்கள் குருநாதர் எழுந்திருப்பதற்கு முன் காலை 6 மணிக்கு கூடாரத்தைத் தயார்செய்கிறார்கள்.
பூகி மாதா படித்துறையில் தனியாக வசிக்கும் ஒரு பெண் துறவி சமையலுக்காக நெருப்பைப் பற்றவைக்கிறார்.
பக்தர்களால் சூழப்பட்டிருக்கும் துறவி, புனித நீரை பக்தர்கள் மீது தெளித்து ஆசீர்வாதம் செய்கிறார்.
நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம்.
- கடுவெளிச் சித்தர்
மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு.
- கடுவெளிச் சித்தர்
வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ?
- குதம்பைச் சித்தர்
ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?
- பத்திரகிரியார்
காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ.
- கடுவெளிச் சித்தர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT