Published : 10 Oct 2013 04:20 PM
Last Updated : 10 Oct 2013 04:20 PM

புரட்டாசி மாதம் என்ன சிறப்பு? - பாலகுமாரன் பதிலளிக்கிறார்

இந்து மதம் இயற்கையோடு ஒன்றியது. புரட்டாசி மாதத்தைக் கவனித்திருக்கிறீர்களா? வெய்யில் குறைந்து, மழை அவ்வப்போது தலைகாட்டி, இரவில் குளிரும், பகலில் உஷ்ணமும், இருக்கின்ற ஒரு மாதம். அதாவது பயிர், பச்சைகளுக்கு நல்ல நீர் கிடைத்து, பூக்கத் துவங்கி வெய்யிலை ஜீரணித்துச் செழித்து வளருகின்றன மாதம்.

ஒரு மனித வாழ்க்கை, அவனைச் சுற்றியுள்ள பயிர் பச்சைகளோடு இருக்கிறது. நதியோடு இருக்கிறது. ந்திக்கரை நாகரீகம் என்பது பயிர் பச்சைகளின் நாகரீகம். பயிர் பச்சைகளின் நாகரீகம்தான் உணவு நாகரீகம். உணவு நாகரீகம் தான் உறவு நாகரீகம். உறவு நாகரீகம் தான் மிகச்சிறந்த நாகரீகம்.

முழுவீச்சில் விவசாயம் நடந்து கொண்டிருக்கின்ற மாதம். இந்த மாதத்தில் வளர்ச்சி என்ற விஷயத்தை சனாதன தர்மம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மாதத்தின் முதல் பகுதியில் பித்ரு வணக்கத்தை ஆரம்பிக்கிறது. “பயிர் பச்சைகள் வளருகின்றன. விவசாயத்தில் இறங்குகிறேன். எல்லாம் நீ கற்றுக் கொடுத்தது. எல்லாம் உன்னுடைய ஞானம். தகப்பனே உன்னுடைய அனுபவம், இவைகளை வைத்துக் கொண்டு நான் விவசாயம் செய்கிறேன். விவசாயத்திற்கு உதவியாக இருக்கின்ற தொழில்களைச் செய்கிறேன். மனிதர்களுக்கு உதவியாக இருக்கிறேன். என்னுடைய வேலைகள் சிறப்பாக நடைபெற வேண்டும். என் குடும்பம் சந்தோஷமாக வாழவேண்டும். உன்னை நான் மனதார இந்த வேலைநாட்களில் நினைத்துக் கொள்கிறேன். கடும் வேலைகள் காத்திருக்கின்றன. ஒரு நாள் உனக்காக உட்கார்ந்து உன் மனக்கேதம் தீர்க்கும் பொருட்டு நீர்வார்க்கிறேன். உன்னுடைய பசியைத் தீர்க்கும் பொருட்டு பிண்டம் உருட்டுகிறேன். நீ சௌக்கியமாக இருக்க வேண்டும். என்று அறவழியில் நின்ற அந்தணருக்கு தானம் தருகிறேன். பித்ருக்களே, என் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள்!” என்று சொல்கிறது.

பித்ரு வணக்கம் இந்து மதத்தில் மட்டும் அல்ல. எல்லா மதத்திலும் இருக்கிறது. முன்னோர்களைக் கொண்டாடாத, மதமே இல்லை. ஆனால் சனாதனதர்மம் மிகத் தெளிவாக மகாளய அமாவாசை என்று பித்ருக்கள் அருகே இருப்பதை உணர்ந்து சிரார்த்தம் செய்கிறது. சிரார்த்தம் என்றால் சிரத்தையாக இருத்தல் என்று பொருள். சிரத்தையாகச் செய்வதே சிரார்த்தம். “மனம் முழுவதும் தகப்பனையும் இறந்துபோன தாயையும் தாத்தாவையும் பாட்டியையும் நினைத்து உண்ணுங்கள். “ என்று சொல்வது ஒரு சிறந்த வழிபாடு. கடவுள் வழிபாட்டை விட மேலான வழிபாடு. அதெப்படி அவர்கள் இருப்பது தெரியும்?

அவர்கள் இல்லாமல் நீங்கள் எப்படி வந்திருக்க முடியும். அவர்கள் அறிவு இல்லாமல் உங்களுக்கு எப்படி அறிவு வந்திருக்க முடியும். நீ திடீரென்று பூமியில் இருந்து வெடித்து சிதறி வந்தாயா. இல்லை. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி, நான் பிறந்திருக்கிறேன். எனவே, என் எல்லா குணங்களும் அவர்கள் குணங்களை ஒட்டியிருக்கின்றன என்ற ஞானம்.

அவர்கள் வருவார்கள் என்பதை எப்படி உணர்கிறது. மனம் உணரும். வரவேண்டும் என்று விரும்பினால், வரவேண்டும் என்று விரும்பினால் வந்தது தெரியும். எப்படி வருவார்கள் என்று கேட்டால் உங்களுக்குச் சொல்ல அவர்களுக்கு விருப்பமில்லை. வந்து விட்டார்கள் என்பதை வருவார்கள் என்ற நம்பிக்கையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இதற்கு அடுத்தபடி இந்தப் புரட்டாசி மாதம் சக்தியை வணங்குகிறது. பித்ருக்களை வணங்கியபிறகு இந்த உலகம் முழுவதும் பரவி இருக்கின்ற சக்தியை இந்துமதம் வணங்குகிறது. அதற்கு நவராத்திரி என்று பெயர்.

எது சக்தி. கையைத் தூக்கினால் சக்தி.மூச்சை விட்டால் சக்தி. உணவு உண்டால் சக்தி. இப்படி பல்வேறுல சக்திகள் உடம்புக்கு உள்ளும் உடம்புக்கு அப்பாலும் இருக்கின்றன. சூரியன் ஒரு சக்தி, சந்திரன் ஒரு சக்தி. மற்ற கிரகங்கள் ஒரு சக்தி. பல்வேறு சக்திகளுக்கு நடுவே இந்த பூமி சுழன்று கொண்டிருக்கிறது. இந்த சுழல் ஒரு சக்தி. இவற்றிலிருந்து பல்வேறு விஷயங்கள் பிறக்கின்றன. பூமி சுழல்வதிலிருந்து கிழக்கும் மேற்கும் ஏற்பட்டிருக்கிறது. கிரகங்கள் நகருவதிலிருந்து மக்களின் வாழ்க்கை விதம் விதமாக மாறுகிறது. எனவே, இந்தப் பிறப்பிக்கின்ற சக்தியை, உற்பத்தி செய்கின்ற சக்தியை, தாய் என்று வர்ணித்து அம்மன் என்று சொல்லி அதை வணங்குகிறார்கள்.

செல்வம் என்ற சக்தியை லஷ்மி என்று போற்றுகிறார்கள். படிப்பு என்ற சக்தியை சரஸ்வதி என்கிறார்கள். வீரம் என்ற சக்தியை பார்வதி என்கிறார்கள். இவைகளெல்லாம் சக்திகள். சக்திகளுக்கு இந்த உருவங்களெல்லாம் பெயர்களெல்லாம் குறியீடுகள்.

எதற்கு உருவ வழிபாடு? உன்னை உடம்பாக கொள்கிற வரையில் உருவமற்றதை வணங்கவே முடியாது. உருவமற்றதை மனம் ஒருகாலும் ஸ்வீகரிக்காது. அது உருவத்தைத் தேடும். ஏதோ ஒரு உருவத்தை அது வைத்துக்கொள்ளும். அந்த உருவத்தைத் தான் கடவுள் என்று கருதிக்கொள்ளும். அது கை,கால் முளைத்ததாக இருந்தால் என்ன, கட்டிடமாக இருந்தால் என்ன? அது உருவ வழிபாடு.

இந்து மதம் என்றால் பிள்ளையார் பொம்மை செய்து கடலில் கரைப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது ஒருவித வழிபாடு. பிள்ளையார் என்ற சக்தி உன்னுள் இருக்கின்ற மூளை. மிகப்பெரிய காதும், கூர்மையான கண்களும், வலிமையான துதிக்கையும் கனமான உடம்பும் ஒவ்வொரு விசயத்தைச் சொல்கின்றன. நன்கு பார்க்கவும், நன்கு கேட்கவும், நன்கு மூச்சுவிடவும், நன்கு உண்ணவும் அதற்கு அர்த்தமாக இருக்கிறது. எனவே குறியீடுகளைக் கேலி செய்யாமல் இந்துமதம் என்ன என்பதை இந்துக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x