Published : 03 Apr 2014 01:25 PM
Last Updated : 03 Apr 2014 01:25 PM
விப்ர நாராயணர் என்ற பெருமாள் பக்தர் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்துப் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்துவந்தார். இவர் பெருமாளுக்குப் பூக்கைங்கரியம் செய்வதிலேயே மனம் ஒன்றியவராக இருந்தார். உலக ஆசாபாசங்கள் ஏதுமின்றி அவர் வாழ்ந்து வந்தார். இவர் தொண்டரடிப்பொடி ஆழ்வாராக மாறியது குறித்து ஒரு கதை நிலவுகிறது.
தேவதேவி என்னும் நடன மாது உறையூருக்கு வந்தாள். தன் குழுவினருடன் அரசவையில் ஆடல் பாடல்களை நிகழ்த்தி மன்னரை மகிழ்வித்தாள். தன் நாடு திரும்பும் வழியில் விப்ர நாராயணரின் நந்தவனத்துக்கு வந்தாள். பெருமாள் சேவையில் லயித்திருந்த அவர் பிரமிப்பூட்டும் தேவதேவியின் அழகையும் அலங்காரத்தையும் ஏறிட்டும் பார்க்கவில்லை.
இதனைக் கவனித்த தேவதேவியின் தங்கை, உன் அழகின் வலிமை அவ்வளவுதானா என்று கூறிச் சிரித்தாள். அவமானம் அடைந்த தேவதேவி விப்ரரை மயக்கியே தீருவேன் என்று சபதமிட்டாள்.
தான் அணிந்திருந்த நகைகளையும், அலங்காரத்தையும் நீக்கினாள். எளிமையான பெண்ணின் உருவத்தைக் கொண்டாள். அப்போது மழை பொழிந்தது. மழையில் சொட்டச் சொட்ட நனைந்த அவள் அதே கோலத்தில் விப்ரர் குடிலுக்குள் நுழைய அனுமதி கேட்டாள். உள்ளே வந்த அவளின் அழகில் மயங்கிய விப்ரர், தன் வசம் இழந்தார். இப்படியாகப் பல நாட்கள் சென்றன. தன் தாயைப் பார்த்துவிட்டுத் உடனடியாக வந்துவிடுவதாகத் தேவ தேவி கூறிச் சென்றாள்.
நாட்கள் கடந்தன. அவள் வரவில்லை. தேவதேவியைப் பிரிந்த துயர் தாங்காமல் விப்ரர் அவளைத் தேடிக்கொண்டு சென்றார். அவளோ செல்வச் செழிப்பில் ஊறியவள். விப்ரரிடம் செல்வம் என்ன கொண்டுவந்தாய் எனக் கேட்க, அவர் கையை விரித்தார். வெறுங்கையோடு வந்த அவரை விரட்டிவிடுகிறாள். விப்ரர் மனம் ஏங்கித் தவிக்கிறார்.
விப்ரர் பெருமாளின் சிறந்த பக்தர் என்பதால், பெருமாள் அவருக்கு உதவ விரும்பினார். அவ்வூரில் உள்ள தன் கோயிலில் இருந்த தங்கத் தாம்பாளத்தை, விப்ரர் அனுப்பியதாகச் சொல்லி தேவதேவியின் இல்லத்தில் கொண்டு கொடுத்தாராம். அவளும் மனம் மகிழ்ந்து விப்ரரை மீண்டும் ஏற்றுக்கொண்டாள் என்று போகிறது கதை.
மறுநாள் காலை கோயில் தங்கத் தாம்பாளத்தைக் காணவில்லை என்று மன்னனுக்குப் புகார் சென்றது. காவலர்கள் அதனைத் தேடியபோது அது தேவதேவி இல்லத்தில் இருந்ததை அறிந்தனர். தேவதேவியும் ஒரு பாவமும் அறியாத விப்ரரைக் கை காட்ட, இருவரையும் காவலர்கள் கைது செய்தனர்.
விப்ரர் பெருமாளை வேண்ட, அவரும் மன்னர் கனவில் தோன்றி, தானே இதனைச் செய்ததாகக் கூறி, விப்ரரை விடுவிக்கச் செய்தார். விப்ரரும் இந்தப் பாவம் நீங்கத் தொண்டர்களின் பாதங்களை நீராட்டிய தீர்த்தத்தை உண்டாராம். அது முதல் அவருக்கு தொண்டர் அடிப்பொடியாழ்வார் என்ற பெயர் விளங்கியது.
பின்னர் இவர் திருமாலை, திருப்பள்ளி எழுச்சி என்ற இரு திவ்யப் பிரபந்தங்களை இயற்றினார். அப்பாசுரங்கள் அரங்கனைத் துயிலில் இருந்து எழுப்பும் விதத்தில், “அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே” என்று இன்றும் திவ்ய தேசங்களில் பாடப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT