Last Updated : 16 Jan, 2014 12:00 AM

 

Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM

உறவுகள் மேம்பட விட்டுக்கொடுங்கள்

சில வேளைகளில் பெரும் சுமையாக மாறினாலும் உறவுகள்தான் மனிதனின் பலமே! ஆபத்துகளில் கை கொடுக்க, துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப-துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க உறவுகள் வேண்டும்.

“அவனே மனிதனை நீரால் படைத்தான்; அவனுக்குச் சொந்தங்களையும் பந்தங்களையும் ஏற்படுத்தினான். உம்முடைய இறைவன் பேராற்றல் உடையவன்” (25:54) என்கிறது திருக்குர்ஆன்.

மனிதனுக்குப் பிறப்பால் தாய், தந்தை, சகோதரன், சகோதரி போன்ற 25க்கும் அதிகமான சொந்தங்களும் திருமணத்தால் மாமனார், மாமியார் போன்ற 12க்கும் அதிகமான பந்தங்களும் கிடைப்பது எவ்வளவு பெரிய பலம்!

உறவுகள் மேம்பட முதலில் தேவை, விட்டுக்கொடுப்பதுதான். பிறகு உதவி, அன்பளிப்பு, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது, அடிக்கடி சந்தித்து நலம் விசாரிப்பது, வெளியூரில் இருந்தாலும் தொலைபேசியில் பேசுதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

உறவை முறிப்பது பெரும்பாவம். உறவை முறித்துக்கொள்பவர் சொர்க்கம் செல்ல மாட்டார் என்பது நபிகளாரின் பொன்மொழி. “வாழ்வாதாரம் விரிவடைய வேண்டும்; ஆயுள் அதிகமாக வேண்டும் என்று விரும்புகின்றவர் உறவுகளுடன் சேர்ந்து வாழட்டும்!” என்பதும் நபிமொழிதான். (புகாரீ, முஸ்லிம்)

“அவர் பேசினால் நானும் பேசுவேன்” என்று பதிலுக்குப் பதில் உறவாடுவது, உறவை மதிப்பதாகாது. உறவை முறித்துக்கொள்பவருடனும் உறவாடுவதே உறவை மதிப்பதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நண்பர் ஒருவர் வந்து, “நான் உறவை மதித்து வாழ்கிறேன். ஆனால், உறவுகள் என்னைப் புறக்கணிக்கிறார்கள். அவர்களுக்கு நான் நன்மை செய்கிறேன்; அவர்களோ எனக்குத் தீங்கு செய்கின்றனர். அவர்களுடன் சகிப்புத்தன்மையோடு நடந்துகொள்கிறேன். அவர்களோ என்னைக் கண்டுகொள்வதே இல்லை” என்று முறையிட்டார்.

அப்போது நபிகளார், “நீ சொல்வதைப் போன்று நடந்துகொள்வது உண்மையென்றால், அவர்களின் வாயை அடைத்தவர் போலாகிவிடுவீர்கள். உமக்கு இறைவனின் உதவி கிடைத்துக்கொண்டே இருக்கும்” என்று கூறினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x