Last Updated : 26 Sep, 2013 04:16 PM

 

Published : 26 Sep 2013 04:16 PM
Last Updated : 26 Sep 2013 04:16 PM

தலைகுனிந்த பரமாத்மா

பரமாத்மாவான குழந்தை கிருஷ்ணன் படுசுட்டி. அவனைக் கட்டுப்படுத்துவது யசோதாவின் முக்கிய சவால்களில் ஒன்று. உறியில் இருக்கும் வெண்ணெய்யைத் தனக்குத் தெரியாமல் கிருஷ்ணன் எடுப்பதைத் தடுக்க யசோதா ஒரு காரியம் செய்தாள். உறியில் சில மணிகளைக் கட்டிவைத்தாள். வெண்ணெய்யை எடுக்கக் கிருஷணன் முயன்றால், மணிகள் அசைந்து ஒலித்து காட்டிக்கொடுத்து விடுமல்லவா! அதற்காக.

அன்றைக்கும் வழக்கம்போல் கிருஷ்ணனை உரலில் கட்டிவைத்திருந்தாள் யசோதா. சமையலறைக்குள் அவள் மும்முரமாக இருந்தபோது, கிருஷ்ணனுக்கு ஒரு திட்டம் தோன்றியது. சுற்றும்முற்றும் பார்த்தான். உரலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு (பரமாத்மா ஆயிற்றே!) உறியின் அருகே சென்றான்.

மணிகளைப் பார்த்துக் கேட்டான், "மணிகளே.. நான் யார் தெரியுமா? ".

மணிகள் பவ்யத்துடன் கூறின, "தாங்கள் பரமாத்மா ஆயிற்றே ".

உடனே மணிகளுக்குக் கட்டளையிட்டான் கிருஷ்ணன், "மணிகளே.. நான் வெண்ணெய் சாப்பிடப்போகிறேன். யாரும் ஒலிக்கக் கூடாது!”

"அப்படியே ஆகட்டும்எ"ன்றன மணிகள்.

உரலை மெதுவாக உருட்டிக்கொண்டு வந்தான். அதன் மீது ஏறினான். உறியில் கைவைத்தான். அதிலிருக்கும் பானையில் துழாவினான். வெண்ணெய்யை கைநிறைய எடுத்து வாயில் வைக்கப்போனான், அப்போது பார்த்து மணிகள் கணகணவென்று ஒலித்தன. ஓடிவந்த யசோதா கிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து நையப்புடைத்தாள்.

யசோதா மீண்டும் சமையல்கட்டுக்குப் போன பின், மணிகளைப் பார்த்துக் கேட்டான் கிருஷ்ணன், "மணிகளே, ஒலிக்க மாட்டோம் என்று வாக்குறுதி தந்துவிட்டு ஒலித்தீர்களே, சத்தியத்தை மீறிய பாவத்துக்கு என்ன தண்டனை தெரியுமா? "

"தெரியும் ஸ்வாமி! ஆனால், பகவானுக்கு நைவேத்யம் ஆகும்போது ஒலிப்பதுதானே எங்கள் சுதர்மம்? அதற்காகத்தானே பிறப்பெடுத்தோம்? சுதர்மத்தை மீறுவது பெரும் பாவமல்லவா! அதற்கான தண்டனையும் அதிகமல்லவா" என்று பதில் கூறின மணிகள். பரமாத்மா தலைகுனிந்தாராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x