Published : 16 Oct 2014 01:04 PM
Last Updated : 16 Oct 2014 01:04 PM

தீபாவளியின் தம்பி

கங்கை சிவ சம்பந்தமா, விஷ்ணு சம்பந்தமா என்பதை பூமாதேவி நினைக்கவில்லை. சைவ, வைஷ்ணவ வித்யாசமில்லாமல் சமஸ்த ஜனங்களும் புண்ய தீர்த்தங்களுக்குள் அக்ர (முதன்மை) ஸ்தானம் தருவது கங்கைக்குத் தானே? அதனால் தீபாவளி ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நான பலன் ஏற்படவேண்டும் என்று வரம் பெற்றாள்.

சாதாரணமாக எந்த க்ஷேத்திரத்தின் ஸ்தல புராணத்தைப் பார்த்தாலும், ‘இது காசிக்கு சமமானது; அல்லது காசியையும் விட உசந்தது’ என்றே இருக்கும். இப்படி ஒரு க்ஷேத்திரத்தை மற்ற எந்த க்ஷேத்திரத்தோடும் ‘கம்பேர்’ பண்ணாமல் காசியோடேயே எல்லா க்ஷேத்திரங்களையும் ஒப்பிட்டிருப்பதாலேயே காசிதான் க்ஷேத்ர ராஜா என்று தெரிகிறது.

இப்படியே மற்ற புண்ய தீர்த்தங்களைப் பற்றிய புராணங்களிலும் அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு உசத்தி சொல்லாமல், அந்தந்த நதியையும் பற்றி ‘இது கங்கா துல்யமானது’ அல்லது ‘கங்கையை விட விசேஷமானது’ என்றுதான் சொல்லியிருக்கும். இதனாலேயே கங்கைதான் தீர்த்தங்களில் தலைசிறந்தது என்று ‘ப்ரூவ்’ ஆகிறது. நம் ஆசார்யாளே

பகவத்கீதா கிஞ்சித் அதீதாகங்கா ஜலலவ கணிகா பீதாஸக்ருதபி ஏன முராரி ஸமர்ச்சாக்ரியதே தஸ்ய யமேந சர்ச்சாஎன்று பஜகோவிந்தத்தில் சொல்கிறார். ‘எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் பண்ணி, துளியாவது கங்கா தீர்த்தத்தைப் பானம் பண்ணி, ஒரு தடவையாவது முராரிக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ அவனுக்கு யமனிடம் வியவஹாரம் ஒன்றுமில்லை. அதாவது யமலோகத்துக்கு, நரகத்துக்குப் போகாமல், புண்ய லோகத்துக்கு அவன் போகிறான்’ என்று அர்த்தம்.

நமனை அஞ்சோம் என்று அப்பர் சுவாமிகளும், நலியும் நரகும் நைந்த; நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை என்று நம்மாழ்வாரும் சொன்ன மாதிரி, கங்கா தீர்த்த பானம் பண்ணினவனிடம் யமனுக்கு ‘ஜூரிஸ்டிக்‌ஷன்’ (ஆணையில்லை) இல்லை என்று பகவத்பாதாள் சொல்கிறார்.

இந்த ஸ்லோகத்தில் ஒரு ஆச்சரியம், இதில் சொல்லியிருக்கிற கீதை, கங்கை, முராரி, யமன் ஆகிய நாலுக்குமே தீபாவளி சம்பந்தம் இருப்பதுதான். கீதையை நான் தீபாவளியின் தம்பி என்று சொல்வது வழக்கம். ஏன்? தீபாவளிக்கு நான் என்ன சிறப்புச் சொன்னேன்? சற்றும் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில், அதாவது மகத்தான புத்ர சோகத்தின் மத்தியில் இப்படிப்பட்ட கோலாஹலமான பண்டிகையை ஒரு தாயார்க்காரி உண்டாக்கிக் கொடுத்ததால்தான் அது பண்டிகைகளுக்கே ராஜாவாக இருக்கிறது என்றுதானே சொன்னேன்.

இதே மாதிரிதான், எத்தனை மதப் புத்தகங்கள், தத்வ சாஸ்திரங்கள் இருந்தாலும், அதற்கெல்லாம் சிகரமாக ‘கீதை’, ‘கீதை’ என்றே ஆதிகால மதாசாரியர்களிலிருந்து திலக், காந்தி, இப்போதுள்ள பல சாதுக்கள், பிலாஸஃபிகாரர்கள், அரசியல்வாதிகள்வரை எல்லோரும் கொண்டாடுவதைப் பார்க்கிறோம்.

கீதையும் தீபாவளி மாதிரியேதான் கொஞ்சமும் எதிர்பார்க்க முடியாத சந்தர்ப்பத்தில் பிறந்த தியாக சக்தியிலிருந்து தோன்றியிருக்கிறது. சாதாரணமாகத் தத்வோபதேசம் என்றால் விச்ராந்தியான ஆசிரமத்திலே வயசான குரு, வயசில் சின்னவனான சிஷ்யனுக்குச் செய்வதாக இருக்கும். ஆனால் இந்த பகவத்கீதையோ நேர்மாறாக யுத்த பூமியில், கோரமான ரணகளத்தில் பிறந்தது.

அர்ஜுனன் தனக்கு சம வயசினனான கிருஷ்ணரிடம், தான் யஜமானனாயிருந்து, அவர் வண்டிக்காரனாகத் தேரோட்டுகிறபோது பெற்றுக் கொண்ட உபதேசம். அடுத்த க்ஷணமே தன் தலை போனாலும் போகக்கூடும் என்கிற ஆபத்தான சந்தர்ப்பத்தில் பிராணனை விட சத்யத்தைத் தெரிந்து கொள்வதுதான் பெரிசு என்ற தியாக புத்தியுடன் அர்ஜுனன் பகவானிடம், ‘சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்’ - “சிஷ்யனாக நான் உன்னிடம் சரணாகதி பண்ணிவிட்டேன். எனக்கு உபதேச ரூபமாக உத்தரவு போடு” என்று நமஸ்காரம் செய்தபோது கீதை பிறந்தது.

இதனால்தான் பண்டிகைகளில் தீபாவளி மாதிரி புத்தகங்களில் கீதை உச்சியாக இருக்கிறது. தீபாவளி, கீதை இரண்டையும் கிருஷ்ணரே தான் கொடுத்திருக்கிறார். அடுத்ததாக ஆசார்யாள் சொல்கிற கங்கைக்கும் தீபாவளிக்கும் உள்ள ‘கனெக்‌ஷன்’ இத்தனை நாழி பார்த்தோம்.

மூன்றாவதாக முராரியை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார். பகவானுடைய பெயர்கள் எத்தனையோ இருக்க ‘முராரி ஸமர்ச்சா’ என்றே சொல்கிறார். நரகாசுரனின் சகாவான முரனைக் கொன்றபோதுதான் பகவான் முராரியானார் என்பதைச் சற்று முன்தான் பார்த்தோம்.

கடைசியில் ஆசார்யாள் யமனைப் பற்றிச் சொல்கிறார். நரகன் என்றவுடனேயே நரகத்தின் ஞாபகமும் யமதர்மராஜா ஞாபகமும்தான் வருகின்றன. அதுவும் தவிர, தீபாவளியன்று யமனுக்குத் தர்ப்பணம் பண்ண வேண்டுமென்று சொல்லியிருக்கிறது.

வட தேசத்தில் தீபாவளிக்கு முதல் நாள் யம தீபம் என்றே போடுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x