Published : 09 Oct 2014 11:43 AM
Last Updated : 09 Oct 2014 11:43 AM

திருச்சி மலைக்கோட்டையில் நரமுக கணபதி

அவர் எந்த ரூபத்தில் இருந்தாலும்' என்று சொல்கிறபோது ஆனை ரூபத்திலில்லாமல் ரொம்பவும் அபூர்வமாக மநுஷ்ய ரூபத்தில் 'நரமுக கணபதி' என்றே அவர் இருப்பது நினைவு வருகிறது. சிதம்பரம் தெற்கு வீதியில், தம்முடைய பிரசித்தமான ஆனை முகத்தோடு இல்லாமல், மற்றவர்கள் சொல்லியோ எழுதி வைத்தோதான் ‘இவர் பிள்ளையார்' என்று தெரிந்து கொள்ளும்படி மநுஷ்ய மூஞ்சியோடு ‘நரமுக கணபதி'யாக இருக்கிறார்.

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோவிலிலும் நரமுக கணபதி உண்டு. இதிலே ஒரு வேடிக்கை, யானை முகமில்லாத ஒரு பிள்ளையார் உள்ள கோவிலானாலும் அந்தக் கோவில் சுவாமியைப்(சிவபெருமானை) பற்றி சம்பந்தர் பதிகம் பாடும்போது, சுவாமியின் பல லக்ஷணங்களில் ஒவ்வொன்றையும் சொல்லி, ‘அந்த லக்ஷணத்தை உடையவனை' என்பதற்கு ‘யானை', ‘யானை' என்றே சொல்லி முடித்திருப்பதுதான்! ‘நன்றுடையானை, உமையொரு பாகம் உடையானை, திருவுடையானை, சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே!'

விக்நேச்வரரின் அநேக ஆவிர்பாகங்களைக் குறித்த கதைகளில் ஒன்றின்படி அவருடைய ஒரிஜினல் ரூபம் நரரூபம்தான். அம்பாள் தன்னுடைய அந்தப்புரத்திற்கு ஒரு காவலாள் சிருஷ்டிக்க வேண்டுமென்று நினைத்தாள்.

தன்னுடைய திவ்ய சரீரத்தையே வழித்து அதிலிருக்கிற மஞ்சள் பொடி, குங்குமம், வாசனைப் பொடி முதலானவைகளைத் திரட்டிப் பிசைந்து ஒரு பாலகனாக ரூபம் பண்ணி அதற்கு உயிரும் கொடுத்துக் காவலாக வைத்து விட்டாள். மநுஷ்யர் மாதிரி (தேவர் மாதிரியுந்தான்) கண், காது, மூக்கு, நாக்கு முதலானவை உள்ள ரூபமே அது. அதாவது நரமுக ரூபந்தான்.

பிள்ளையார் என்றே பெயர் பெறப்போகிற அந்தப் பிள்ளையை, தன் உடம்பிலிருந்து தானே வழித்துப் பெற்ற அருமைப் பிள்ளையை அம்பாள் காவல் வைத்து விட்டு ஸ்நானத்துக்குப் போனாள்.

அம்பாள் சர்வ மங்களா, அவள் தன்னுடைய மங்கள சரீரத்திலிருந்து மங்கள வஸ்துவான மஞ்சள் பொடியை வழித்து மூலப் பிள்ளையாரை சிருஷ்டித்ததால்தான் இன்றைக்கும் எந்த சுபகாரியத்தின் ஆரம்பித்திலும் மஞ்சள் பொடியைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்துப் பூஜை செய்கிறோம். ‘மஞ்சள்' என்பதே ‘மங்கள' என்பதிலிருந்து வந்திருப்பதுதான்.

‘இங்கே, அங்கே' என்பதைச் சில பேர் ‘இஞ்சே, அஞ்சே' என்று சொல்கிறார்களல்லவா? இலக்கணத் தமிழிலேயே ‘தூங்கல்' என்பது 'துஞ்சல்' என்றும் வருகிறது. அப்படி, மங்கள என்பதே மஞ்சள் ஆகியிருக்கிறது. சம்ஸ்க்ருதத்தில் மங்களம் என்பதற்கு மஞ்சள் என்று ஒரு அர்த்தம்.

பரமேச்வரன் அந்தப்புரத்திற்கு வந்தார். ‘இதுயார்டா பத்னியின் அந்தப்புரத்தில் புருஷப் பிரஜை?' என்று அவருக்கு ஒரே கோபம் வந்து, ஒன்றும் தெரியாதவர் மாதிரி, அந்தப் பிள்ளையை சிரச்சேதம் பண்ணிவிட்டார். வாஸ்தவத்தில் எல்லாம் தெரிந்துதான் லோகாபகாரம் பண்ண வேண்டும், அதையும் விருவிருப்புள்ள நாடகமாகப் பண்ண வேண்டும் என்றே இப்படிச் செய்தார்.

என்ன லோகோபகார மென்றால் கஜமுகாசுரன் என்ற யானைத்தலை அசுரன் தன்னை மாதிரி யானைத் தலை படைத்தவர்தான் வதம் செய்ய முடியுமென்றும், அதோடு அப்படி வதைக்கக்கூடிய சத்ரு ஸ்திரீ-புருஷ சம்பந்தத்தில் பிறக்காதவனாயிருக்க வேண்டுமென்றும் வரம் வாங்கி வைத்துக் கொண்டிருந்தான். அது ஒரு பக்கத்தில்.

இன்னொரு பக்கம், நாம் பார்த்த சம்பவம் நடந்த சமயம், கைலாசத்திற்குப் பக்கத்தில் லோகத்திற்கு அமங்களம் உண்டாகும்படியாக ஒரு யானை வடக்கே தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தது. இந்த இரண்டையும் ‘கம்பைன்' பண்ணித்தான் சுவாமி நாடகமாடினார்.

அம்பாள் சிருஷ்டித்த அருமைக் குழந்தையைத் தாம் சம்ஹாரம் பண்ணியதற்காக அவளிடம் நன்றாக ‘டோஸ்' வாங்கிக் கொண்டு சந்தோஷப்பட்டார். அப்புறம் வடக்கே தலை வைத்திருந்த யானையை சிரச்சேதம் பண்ணி, அந்த சிரசைக் கொண்டு வந்த இந்தப் பிள்ளையின் முண்டத்தில் பொருத்தி, பிள்ளையாராக உயிர் கொள்ளும்படிச் செய்து அம்பாளை திருப்திப்படுத்தினார். பிள்ளையார் மூலம் கஜமுகாசுரன் வதமாகி லோக க்ஷேமம் உண்டாகும்படியும் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x