Published : 14 Aug 2014 07:18 PM
Last Updated : 14 Aug 2014 07:18 PM

வார ராசிபலன் 14-08-2014 முதல் 20-08-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 10-ல் சூரியனும் 11-ல் புதனும் சஞ்சரிப்பதால் எதிர்ப்புக்கள் விலகும். பண வரவு சீராகவே இருந்துவரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஜன்ம ராசியில் செவ்வாயும் சனியும், 12-ல் ராகுவும் உலவுவதால் பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை.

பலவிதமான சிந்தனைகள் மனத்தில் உருவாகி, குழப்பத்தை உண்டுபண்ணும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபடுவதன் மூலம் மனத்தெளிவு பெறலாம். 17-ம் தேதி முதல் சூரியன் 11-மிடம் மாறுவதால் எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆதாயம் கூடும். மூத்த சகோதர, சகோதரிகளால் செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 15, 20 (பிற்பகல்).

திசைகள்: வடமேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை, வெண்மை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 7.

பரிகாரம்: துர்கை அம்மனை வழிபடவும். நாக வழிபாடு நலம் கூட்டும்.



விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் சுக்கிரனும் 10-ல் புதனும் 11-ல் ராகுவும் சஞ்சரிப்பது விசேடமாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் ஏற்படும். பண வரவு திருப்தி தரும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை மனத்துக்குத் தெம்பூட்டும். பிற மொழி, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும்.

12 -ல் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சேர்ந்து உலவுவதால் எதிர்பாராத செலவுகள், இழப்புக்கள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களின் நலனில் அக்கறை தேவைப்படும். 17-ம் தேதி முதல் சூரியன் 10-மிடம் மாறுவதால் செய்தொழிலில் அபிவிருத்தி காணலாம். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 15, 19.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், பச்சை, இளநீலம்.

எண்கள்: 3, 4, 5, 6.

பரிகாரம்: சுப்பிரமணியரையும், ஆஞ்சநேயரையும் தொடர்ந்து வழிபடவும். கால் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது நல்லது. காலை வேளையில் சிறிது நேரம் குல தெய்வத்தை நினைத்து, தியானம் செய்யவும்.



தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் 11-ல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பது சிறப்பாகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். இயந்திரப்பணிகள் ஆதாயம் கொண்டுவரும். சமுதாய நலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

17-ம் தேதி முதல் சூரியன் ஒன்பதாம் இடம் மாறி, புதனுடன் கூடுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். உடல்நலம் சீராகும். தர்ம சிந்தனை வளரும். 4-ல் கேதுவும் 8-ல் குருவும் இருப்பதால் தாய் நலனில் கவனம் தேவைப்படும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் பொறுப்புக்களைச் சரிவர ஆற்றிவருவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 15, 20.

திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, புகை நிறம், பச்சை, இளநீலம், வெண்மை.

எண்கள்: 4, 6, 8, 9.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும், குடும்பப் பெரியவர்களையும் வணங்கி அவர்களது வாழ்த்துக்களைப் பெறவும்.



மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும், 8-ல் புதனும் 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவதால் முயற்சி வீண்போகாது. எதிர்ப்புக்கள் விலகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். பண வரவு அதிகரிக்கும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் அனுகூலமான போக்கு தென்படும். மதிப்பு உயரும். உடல்நலம் சீராக இருந்துவரும். இயந்திரப்பணியாளர்களுக்கு ஆதாயம் கூடும்.

நிலபுலங்கள் சேரும். மாணவர்களது நிலை உயரும். 7-ல் சூரியனும் சுக்கிரனும் இருப்பதால் வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. 17-ம் தேதி முதல் சூரியன் எட்டாம் இடம் மாறி, புதனுடன் கூடுவதால் எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவை. மறைமுக நோய்நொடிகள் உண்டாகும். ராசிநாதன் வலுத்திருப்பதாலும் ராசியைக் குரு பார்ப்பதாலும் பயம் தேவையில்லை.

அதிர்ஷ்டமான தேதிகள்:,ஆகஸ்ட் 14, 15, 20.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்..மெரூன், பச்சை.

எண்கள்: 3, 5, 7, 8, 9.

பரிகாரம்: பராசக்தியை வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்யவும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது நல்லது.



கும்ப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன் உலவுவது சிறப்பாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் கோசாரப்படி சிறப்பாக இல்லை. குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். உடல்நலம் பாதிக்கும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண அரும்பாடுபட வேண்டிவரும். தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட வேண்டிவரும். மக்கள் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவரால் சங்கடம் ஏற்படும்.

புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். பயணத்தின்போது பாதுகாப்பு அவசியம் . புதியவர்களை நம்ப வேண்டாம். குறுக்கு வழி வேண்டாம். வீண்வம்பு கூடாது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை. அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிர்வாகத்துறையினருக்கும் ஓரளவு நலம் உண்டாகும். ஜாதக பலம் கூடியிருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 15, 20.

திசை: கிழக்கு.

நிறம்: ஆரஞ்சு.

எண்: 1.

பரிகாரம்: வேதவிற்பன்னர்களைக் கொண்டு உங்கள் வீட்டிலேயே நவக்கிரக ஜபம், ஹோமம் செய்வது நல்லது. கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். எளியவர்களுக்கு உதவி செய்யவும்.



மீன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் குரு சுக்கிரனுடன் கூடி ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் விசேடமான நன்மைகள் உண்டாகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். மக்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். மந்திர சித்தி உண்டாகும். பெண்களால் நலம் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். 6-ல் புதன் உலவுவதால் வியாபாரம் பெருகும்.

மாணவர்களது நிலை உயரும். ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும், 8-ல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. நிதானமாக யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். உடன்பிறந்தவர்களது நலனில் கவனம் தேவை. வேலையாட்களால் தொல்லைகள் சூழும். வம்பு, வழக்கு வேண்டாம். 17-ம் தேதி முதல் சூரியன் ஆறாம் இடம் மாறுவதால் அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 15, 20.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், பச்சை, வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: செவ்வாய், ராகு, சனி, கேது ஆகியோருக்கு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது. அஷ்டமச் சனியின் காலம் இது என்பதால் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். நாகரை வழிபடுவது அவசியமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x