Published : 16 Oct 2014 12:56 PM
Last Updated : 16 Oct 2014 12:56 PM

மதீனா மாநகர வீதியில்...

நபிகள் நாயகத்தின் தோழர் ஒருவரின் இறுதி ஊர்வலம் ஒன்று அமைதியாக நடந்து கொண்டிருந்தது. நபி முஹம்மது, அபுபக்கர், உமர், உஸ்மான் உட்பட பல நபித்தோழர்கள் அனைவருடனும் மக்களோடு மக்களாக சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது ஒருவர் நபிகளைக் குறுக்கிட்டு, “ஏ முஹம்மதே! எனது கடனைத் திருப்பித் தரும் எண்ணமே உமக்கு இல்லையா? அப்துல் முத்தலிஃபின் குடும்பத்தினரே இப்படித்தானா?” என்று கோபாவேசத்தோடு அண்ணலாரின் கழுத்துத் துண்டை முறுக்கி இறுக்கிப் பிடித்தவராக தன் கடனைத் திருப்பிக் கேட்டார்.

வறுமையால் வாடிய ஒரு கூட்டத்தாருக்கு உதவ நபிகளார், ஒருமாதத் தவணையில் 80 தினாரைக் கடனாக வாங்கியிருந்தார்கள். ஆனால் அவர் 27-வது நாளே வந்து கடனைத் திருப்பிக் கேட்டார் கடன் கொடுத்தவர். அதுவும் சோகம் ததும்பும் வேளையில், மக்கள் பலரின் முன்னிலையில் இப்படி ஒரு அநாகரிகமான காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. கழுத்து நெரிக்கப்பட்டதால் நபிகளாரின் முகம் சிவந்து மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டார்கள்.

கோபமான உமர்

உடனே அங்கிருந்த உமர் கண்கள் புடைத்து கனல் தெறிக்க வேகமாக வந்து “ஏ இறைவனின் எதிரியே! இறைவனின் தூதரிடம் இப்படித்தான் நடந்துகொள்வதா? இவரை அனுப்பிய இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன், சொர்க்கம் எனக்குத் தவறிவிடுமோ என்ற அச்சம் மட்டும் இல்லாவிட்டால், என் வாள் உன் கழுத்தில் இருந்திருக்கும். விலகு..” என்று கூறியவாறு நபிகளாரை அவரது பிடியிலிருந்து விடுவித்தார்.

தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்ட நபிகளார், உடனே புன்முறுவல் பூத்தவாறு தம்மிடம் கடனைத் திருப்பிக்கேட்டவரை பார்த்தார்கள். ஆனால் உமர் அவர்களைக் கோபத்துடன் நோக்கிக் கூறினார்கள்: “உமரே! என்ன இது? நீர் நடந்து கொண்ட விதம் சரியில்லை. என்ன நடந்தது என்று எங்களிடம் நேர்மையாக விசாரித்திருக்க வேண்டும்.”

பின்னர் தம்மிடம் முரட்டுத்தனமான முறையில் பணம் கேட்டவரிடம், “உமக்கான தவணை நாள்கள் இன்னும் மீதி இருக்கிறதே!” என்று கேட்டார்கள்.

அவர், “அதெல்லாம் தெரியாது. எனது கடனை இப்போதே தரவேண்டும்” என்றார்.

உடனடியாக உமரிடம் திரும்பிய நபிகள், “உமரே! பொது நிதியிலிருந்து இவருக்கான கடனை அடையுங்கள். மேலதிகமாக 20 ஸஃ (ஒரு ஸஃ என்பது இன்றைய மதிப்பில் 2132 கிராமுக்கு இணையான தானிய அளவு) பேரீச்சம் பழங்களையும் கொடுங்கள் ” என்றார்.

உமருக்கோ மிக வியப்பாக இருந்தது. கொடுக்க வேண்டிய கடனைத்தானே கொடுக்க வேண்டும். எதற்காக மேலதிகமாக கொடுக்க வேண்டும்? என்று பெருமானாரிடமே கேட்டார். அண்ணலார் நபிகளோ, “உமரே! நீர் அவரைக் கொலை செய்வதாகப் பயமுறுத்திவிட்டீர்.. அதற்கான பரிகாரம்தான் இது.” என்றார்.

கோபத்துடனே உமர் அவரை அழைத்துச் சென்று, நபிகளார் சொன்னபடி வழங்க, அவற்றைப் பெற்றுக்கொண்ட அவர் கேட்டார்: “உமரே! என்னை யாரென்று தெரிகின்றதா...?”

“நான் தான் ஸைத் பின் ஸன்ஆ”

“ஓ! புகழ்பெற்ற யூத அறிஞரா நீர்...?” என்று உமர் கேட்டார்.

இறைத்தூதரின் அடையாளங்கள்

“உமரே! நான் இறைத் தூதரின் முகத்தில் எல்லா அடையாளங்களையும் கண்டேன், இரண்டைத் தவிர. முதலாவது அவருடைய சகிப்புத் தன்மையும் உறுதியும். அவருடைய சகிப்புத் தன்மை அவருடைய கோபத்தை இல்லாமலாக்கிவிடும். இரண்டாவது, ஒருவர் எவ்வளவு முட்டள்தனமாகவும், அறிவீனமாகவும் அவரிடம் நடந்துகொண்டாலும், அவர் அதைவிட அதிக அன்பாகவும், சகிப்புத் தன்மையுடனும் இருப்பார். உமரே! இந்த இரு விஷயங்களையும் நான் சோதித்துப் பார்க்கவே அவ்வாறு நடந்துகொண்டேன். இப்போது நான் திருப்தியுடன் இருக்கின்றேன்.”

பின்னர் நபிகளாரிடம் வந்து உடன்படிக்கை செய்து இஸ்லாத்தில் தம்மை இனணத்துக் கொண்டார்.

இறைவன் தன் திருமறைக் குர்ஆனில், “மேலும் அளவற்ற அருளாளனாகிய இறைவனின் (உண்மையான) அடியார்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள்; அறிவீனர்கள் அவர்களுடன் முறைகேடாக உரையாடினால், உங்கள் மீது சாந்தி மலரட்டும் என்று கூறிவிடுவார்கள்.” (25:63)

ஆம், அறிவீனர்களும், முட்டாள் களும் நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டாலும், ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனும் பாடத்தை இந்த நிகழ்வு நமக்குக் கற்றுத்தருகிறது.

நபிகளார் தாம் வாழ்ந்துகாட்டி, பின்னர் அவ்வாறே மக்களையும் வாழவைத்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x