Published : 02 Jan 2014 12:58 PM
Last Updated : 02 Jan 2014 12:58 PM
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது பகல்பத்து, இராப்பத்து என இருபது நாட்களும் ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் தேவகானமாய் ஒலிக்கும். பக்திரசம் சொட்டும் அந்தப் பாடல்களின் குரல்களுக்கு சொந்தக்காரர்கள் அரையர்கள்.
பிரபந்தங்களை மரபாகப் பயின்று வருபவர்கள்தான் அரையர்கள். அரையர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரம் தெருவில் வசிக்கும் சம்பத் அரையரைப் பார்த்து, அரையர் சேவையைப் பற்றிக் கேட்ட போது அவர் கூறியது:
“நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைத் தொகுத்த நாதமுனிகள் காலத்திலிருந்து எங்களின் அரையர் மரபு தொடங்குகிறது. நாதமுனிகளின் தங்கை தன் இரு மகன்களைத் தான் திவ்யப் பிரபந்தங்களைப் பெருமாள் கோயில்களில் பாட அர்ப்பணிக்கிறார். அவர்கள் மேலகத்து ஆழ்வார், கீழகத்து ஆழ்வார் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய வழிவந்த வாரிசுகள்தான் நாங்கள்.
பெருமாள் கோயில்களில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாடும் அரையர்கள் குடும்பங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர், மேல்கோட்டை, திருநாராயணபுரம் (கர்நாடகா), ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் இருக்கிறார்கள். ஸ்ரீரங்கத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறோம். இன்னொரு குடும்பம் ராமானுஜம் அரையருடையது.
என்னோட 11-வது வயதிலிருந்து நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் பாடி வருகிறேன். வைகுண்ட ஏகாதசியின்போதான 20 நாள் விழாவில் ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களைப் பாட கோயிலில் இருந்து வந்து அழைத்துச் செல்வார்கள் இதுதான் மரபு. எங்களின் பாடல்களைக் கேட்டு பெருமாள் தன்னுடைய பரிவட்டத்தையும் குல்லாவையும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால், பாடலைப் பாடும்போது குல்லா அணிந்துகொண்டு பாடுவோம். நாங்கள் பாடல்களை நேரடியாக பெருமாள் முன்பு நேரடியாகப் பாடுவதாக உணர்கிறோம்.
பகல்பத்து விழாவின் முதல் ஐந்து நாளில் பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி பாடுவோம். வைகுண்ட ஏகாதசி முதல் நம்மாழ்வார் மோட்சம் வரைக்கும் திருவாய்மொழி பாடுவோம். இயல், இசை, நாடகம் என்கிற அடிப்படையில் பாடல்களைக் காட்சிகளாக்க அபிநயமும் நடத்துவோம். அதற்கு அடுத்த நாள் இயற்பா என நாலாயிரம் பாடல்களையும் பாடி முடித்துவிடுவோம். இதைத்தவிர அரங்கநாதர் உற்சவ காலங்களிலும் பாடுவோம்.
தம்பிரான் படி வியாக்கியானம், பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை போன்றவர்களின் வியாக்கியானப் படிகள் வழிவழியாக எங்களிடம் மட்டுமே இருக்கிறது. இதை எங்கள் குடும்பங்களுக்கு மட்டுமே சொல்லித் தருகிறோம். வேறு யாருக்கும் சொல்வதில்லை. அரங்கநாதர் கோயிலில் மட்டுமே நாங்கள் பாடுவோம்.
இயற்பா பாடுவதற்கு இருந்த அமுதானார் என்பவரின் குடும்பத்தில் வாரிசு இல்லாததால் அவருக்குப் பின் இயற்பாவையும் 24 ஆண்டுகளாக நாங்கள்தான் பாடுகிறோம்” என்றார் சம்பத் அரையர். உங்கள் மகன்களும் பாடுவார்களா என்று கேட்டபோது, “நிச்சயமாக, எங்கள் குடும்பத்தில் சிறு வயதிலிருந்தே பயிற்றுவிக்கிறோம். என் மகன் பரத்வாஜ் விமான பைலட்டாக இருக்கிறார். ஆனாலும் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதும் அவர் பாடுவார். இளைய மகன் இன்ஜினியர், அவரும் பாடுவார். எங்களுக்கு அரசு உதவித்தொகை தருவதாகச் சொன்னார்கள். நாங்கள் அதை மறுத்துவிட்டோம். இதை பெருமாளுக்கு செய்யும் சேவையாக மட்டுமே நினைக்கிறோம்” என்றார். அருகிலிருந்த பரத்வாஜும் நிச்சயமாக இதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று உறுதியாகச் சொன்னார்.
ஆழ்வார்களின் இனிமையான பக்திப் பாசுரங்களால் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமியையும், கோயிலையும் மந்திர கனத்திற்கு ஒப்பான அதிர்வைத் தந்து வரும் அரையர்களின் சேவை ஒரு நீண்ட பாரம்பரியமாக தொடர்ந்து வந்திருக்கிறது. கோயிலில் இருந்து புறப்பட்ட போது அரையர்கள் என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டதற்குப் ‘பாட்டுக்கு அரசன்’ என்று பெருமை பொங்கச் சொன்னார் பரத்வாஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT