Published : 02 May 2019 11:44 AM
Last Updated : 02 May 2019 11:44 AM

தெய்வத்தின் குரல்: தில்லைச் சித்ரக்கூடம்

சைவர்களுடைய ‘பாடல் பெற்ற ஸ்தல’ங்களில் முதலிடம் பெற்றுள்ள சிதம்பரத்தை வைஷ்ணவர்களும் தங்களுடைய நூற்றியெட்டு ‘திவ்யதேச’ங்களில் ஒன்றான ‘தில்லை நகர் திருச்சித்ரக் கூடம்’ என்கிறார்கள்.

பரமேச்வரன் நடராஜாவாக ஏக ஆட்டம் ஆடும் அந்த க்ஷேத்ரத்திலே, அந்த ஆலயத்திலேயே மஹா மாயாவியான மஹாவிஷ்ணு கோவிந்தராஜா என்ற பெயரில் ஒரே தூக்கமாகத் தூங்கிக் கொண்டே ஜகத்ரக்ஷணம் பண்ணுகிறார்! இந்த சன்னிதிதான் திருமங்கையாழ்வாரும் குலசேகரப் பெருமாளும் மங்களாசாசனம் செய்துள்ள தில்லைச் சித்ரக்கூடம் என்கிறார்கள்.

ஆனால், சுவாமிநாதையருக்கோ இந்த திவ்யதேசம் சிதம்பரம் இல்லை என்று அபிப்பிராயம்.  ‘சித்ரக்கூடம் என்பது பெயரானால் அதிலுள்ள மூர்த்தி ராமசந்த்ர மூர்த்தியாகத்தானே இருக்கணும்? பேர் சித்ரக்கூடம், பெருமாள் கோவிந்தராஜா என்றால் பொருத்தமே இல்லையே’ என்று அவருக்கு யோசனை.

சேஷ சயனம் செய்யும் மஹாவிஷ்ணுவே கோவிந்தராஜா என்று கிருஷ்ணராக ஆக்குவது மட்டும் சரியா என்றால், சரிதான். ஏனென்றால், கிருஷ்ணர் பூர்ணாவதாரம் என்ற முறையிலே அவரையும் மஹா விஷ்ணுவையும் ஒருவராகவே பாவிப்பது வழக்கம்தான். திருப்பதி ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கே  ‘கோவிந்தா’ தானே போடுகிறோம்?

அய்யரின் கவனத்தில் பதிந்த இன்னொரு விஷயம். சித்ரக்கூடத்தைப் பாடியுள்ள குலசேகரர் தம்முடைய ‘பெருமாள் திருமொழி’யின் அந்தப் பாசுரத்தில் முழுக்க ராமாயணச் சம்பவங்களையே சொல்லிக்கொண்டு போவதாகும். ராமரை மூலவராகக் கொண்ட ராமக்ஷேத்ரமாகிய வேறேதோ, சிதம்பரமாக நினைக்கும் வழக்கம் வந்து விட்டதா என்று ஐயர் ஆராயந்து கொண்டிருந்தார்.

ஒரு எதிர்க் கேள்வி கேட்கலாம். “குலசேகரர் ராமனையே இஷ்ட மூர்த்தியாக உபாசித்தவர். பூர்வத்தில் இவர் சேர நாட்டு அரசராகத் திருவஞ்சிக்களத்திலிருந்து கொண்டு ஆட்சி நடத்தியபோது ராமாயண உபன்யாசம் நடந்து, அதிலே ‘ஜனஸ்தானத்திலிருந்த பதினாலாயிரம் ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்வதற்காக ராமர் தனி மனிதராகப் புறப்பட்டார்’ என்ற இடம் வந்தவுடன் இவர், பக்திப் பரவசத்தில் கால பேதங்களை மறந்துவிட்டார்.

’என் ஸ்வாமி தனித்துப் போகவா? இதோ என் சேனைகளைத் திரட்டிக் கொண்டு, கூடப் போவேன்’ என்று கிளம்பியிருக்கிறார்! அவருக்கு ‘அந்தா ராம மய’மாக இருந்ததால் திருக்கண்ணபுரத்தில் கூடத்தான் கௌசல்யா தேவியின் பாவத்தில் குழந்தை ராமருக்குத் தாலாட்டுப் பாடியிருக்கிறார். ஆகையால், கோவிந்தராஜாவையும் அவர் ராமராகப் பாடியிருப்பதில் ஆராய்ச்சிக்கான விஷயம் என்ன இருக்கிறது?” என்று கேட்கலாம்.

ஸ்வாமிநாதையர் அபிப்பிராயப்படி, திருக்கண்ணபுரத்தில் பாடிய மாதிரி பொதுப்படையாக, சித்ரக்கூடத்தில் பாடியபோது, தில்லை நகர் திருச்சித்ர கூடந்தன்னுள் திறல்விளங்கு மாருதியோடமர்ந்தான் தன்னை என்று, இது ராமனின் மூர்த்தி இருக்கும் சன்னிதிதான் என்று திட்டமாகக் குறிப்பிட்டே காட்டியிருக்கிறது.

தில்லைச் சிற்றம்பல சம்பந்தம்

‘தில்லை’ விளாகம் என்று இன்று ஊர் பேரே இருப்பதால் இது ஆதியில் ‘தில்லைச் சித்ரக்கூடம்’ என்று பேர் பெற்றிருக்கக் கூடும்தான். தில்லைக்குரிய நடராஜாவும், சித்ரக்கூடத்துக்கு உரிய ராமரும் சேர்ந்து இருக்கும் இந்த ஊருக்குத் தானே இந்தப் பேர் ரொம்பப் பொருத்தம்?

இங்கே நடராஜ மூர்த்தி அகப்பட்டது எவ்விடத்திலென்றால், ‘அம்பல ஊருணி’ என்ற குளத்தருகில். மறுபடியும் தில்லைச் சிற்றம்பல சம்பந்தம் வந்துவிடுகிறது! அதாவது பூர்வகாலத்தில் இது இரண்டாவது சிதம்பரமாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.

இப்போதும் திருவெண்காட்டை ‘ஆதி’ சிதம்பரம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். சிதம்பர தீக்‌ஷிதர் மூவாயிரவரில் ஒரு பிரிவினர் வெகு காலம் முன்பு தில்லை விளாகத்திலும் பூசகர்களாக இருந்திருக்கலாம். அதனாலேயே குலசேகரப் பெருமாள் ‘அந்தணர்க ளொருமூவா யிரவரேத்த’ என்று பாடியிருக்கலாம்!

தில்லை விளாகத்துக்கு உள்ள ராம சம்பந்தம் ரொம்ப சுவாரஸ்யம்! விக்ரஹம் கிடைத்த பிறகு கட்டிய கோயிலுக்குப் புஷ்கரணியாக இப்போது ‘ராம தீர்த்தம்’ எனப்படுவதற்கு ரொம்ப காலமாக ‘நல்ல பிள்ளை பெற்றாள் குளம்’ என்ற பெயர் வழங்கி வந்திருக்கிறது. யார் அந்த ‘நல்ல பிள்ளை பெற்றாள்’ என்றால் கௌசல்யா தேவிதான்.

‘கௌசல்யா சுப்ரஜா’ என்ற விச்வாமித்ரர் வாக்கால் இன்றைக்கும் விச்வ முழுவதும் துதிக்கப் படுபவன் ராமன். ’சுப்ரஜா’வுக்கு நேர்தமிழ்தான் ‘நல்ல பிள்ளை’. இவ்வூருக்குப் பக்கத்தில் ‘கழுவன் காடு’ இருக்கிறது – ஜடாயுக் கழுகை நினைவுபடுத்துவதாக. ‘ஜாம்பவான் ஓடை’யும் இருக்கிறது. ஏழெட்டு மைலில் ‘தம்பிக் கோட்டை’ – லக்ஷ்மணன் பேரில் ஏற்பட்டது என்கிறார்கள். அப்புறம் ஆறேழு மைல் போனால் அதிராம்பட்டினம் என்கிற அதிவீர ராமபட்டினம்.

ராம சரம்

இன்றைக்குத் தெய்விகமான ரூப சௌந்தர்யத்துக்குப் பேர் போன விக்ரஹங்களாக ஒரு பத்துப் பதினைந்தை முதல் ரேங்க் கொடுத்துச் சொன்னால் அதில் தில்லை விளாகம் ராமரும் ஒருத்தராக இருப்பார். ஐந்தடி உயரத்துக்கு அந்தசந்தமாய் சர்வாங்க சுந்தரமாய் நிற்கும் ராமசந்த்ர மூர்த்தியை எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதிலேயுள்ள அநேக விசேஷங்களில் ஒன்று ‘ராம சரம்’ என்கிற அம்பு. மற்ற ஸ்தலங்களிலுள்ளதுபோல், கூர்முனைக் கோடியிலுள்ள தலைப்புற நுனியில் மொட்டையாகவோ, பிறை வடிவமாகவோ முடியாமல் ஒரு முக்கோணத்தைப் போல முடிந்திருப்பது. இன்னொரு விசேஷம், இடதுகை மணிக்கட்டில் கௌசல்யா தேவி – நல்ல பிள்ளை பெற்றாள் – அந்த நல்ல பிள்ளையின் வனவாசத்தில் அதற்குத் தீங்குகள் வராமலிருக்க வேண்டும் என்று கட்டிய ரக்ஷை காணப்படுவது.

சீதை, லக்ஷ்மணர், அனுமார் எல்லாமே நெஞ்சைக் கவர்கிற மூர்த்திகள். அனுமாரிடம் சிறப்பு அம்சம், ‘திறல் விளங்கு மாருதி’ என்று ஆழ்வார் சொன்னது வீரத்தின் திறலாக இல்லாமல் பணிவின் திறலாக, பக்தியின் சக்தியாக வடித்தெடுக்கப்பட்டிருப்பதாகும். இங்கே அடக்கத்திலும் அடக்கமாக இடது கையை உடம்பைச் சேர ஒட்டித் தொடையில் வைத்துக்கொண்டு வலது கையால் வாயைப் பொத்திக் கொண்டு நிற்கிறார்.

சீதா, லக்ஷ்மண சமேதராக மாத்திரம் ராமர் நின்ற திருக்கோலத்தில் விளங்குகிற ஆலயங்களை ‘சித்ரக்கூடம்’ என்று சொல்வது வழக்கம். வனவாசத்தில் சீதா லக்ஷ்மணர்களோடு மாத்திரம் ராமர் இருந்ததில் முக்கியமான இரண்டு இடங்கள் சித்ரக்கூடமும் பஞ்சவடியும் ஆகும். ஆனால், பஞ்சவடியில் சீதையின் அபஹரணம் நடந்ததால் அதைச் சொல்லாமல், இப்படி மூவராக உள்ள சன்னிதியைச் சித்ரக்கூடம் என்றே சொல்கிறார்கள். சித்ரக்கூடத்தில் ஆஞ்சநேயர் ராமரிடம் வந்து சேரவில்லைதான். ஆனால், நாம் வழிபடும்போது ஒரு தெய்வத்தோடு அதன் பிரதம கிங்கரரையும் சேர்த்துத்தான் ஆராதிக்க வேண்டும். நந்திகேச்வரர் இல்லாமல் பரமேச்வரனையும், கருடாழ்வார் இல்லாமல் மஹாவிஷ்ணுவையும், ஆஞ்சநேயர் இல்லாமல் ராமரையும் பூஜிப்பதற்கில்லை என்பதாலேயே இங்கே ஆஞ்சநேயரும் காட்சி கொடுக்கிறார்.

(தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x