Published : 19 Apr 2019 02:43 PM
Last Updated : 19 Apr 2019 02:43 PM
அக்ரூரர் கிருஷ்ணனுக்கு சிற்றப்பன் முறை. கம்சனின் மறைவுக்குப் பிறகு கிருஷ்ணனிடம் அமைச்சர் பதவி வகித்த யதுகுலப் பெரியோர். கிருஷ்ணனுக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் அவனைத் தன் தலைநகரமான மதுராவுக்கு அழைத்து வரும்படி அக்ரூரரிடம் ஆணையிடுகிறான் கம்சன்.
அதுவரை அக்ரூரர் கிருஷ்ணனை நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவனைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவனைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார்.
கம்சன் கிருஷ்ணனை அழைக்கும் நோக்கத்தை அவர் அறிந்திருந்தபடியால், அப்படி ஒரு காரணத்தை முன்னிட்டு அவனைப் பார்க்கவேண்டி இருப்பது குறித்து மனவருத்தத்துடன் பிருந்தாவனத்துக்குச் செல்கிறார்.
ஆனால், கிருஷ்ணன் மாபெரும் அசுரர்களை மாய்த்து வெற்றி கொண்ட கதைகளைக் கேட்டிருந்த படியால் மனச் சமாதானத்துடன் பிருந்தாவனத்தை அடைகிறார்.
கிருஷ்ணனும் பலராமனும் அவரை மிக்க மரியாதையுடன் வரவேற்று நந்தகோபரிடம் அழைத்துச் செல்கின்றனர். அக்ரூரரும் கம்சனின் கொடிய நோக்கத்தை எடுத்துச் சொல்லி அவன் கட்டளைக்குத் தான் கீழ்ப்படிய வேண்டிய நிர்ப்பந்தத்தைச் சொல்கிறார்.
கம்சனின் குரூர புத்தியை நன்கு அறிந்திருந்த நந்தகோபர் மிகுந்த மனக்கலக்கம் அடைகிறார். ஆனால், கிருஷ்ணனும் பலராமனும் அவருக்குத் தைரியம் சொல்லி, மதுராவுக்குக் கிளம்ப ஆயத்தம் செய்கிறார்கள்.
விரைவில் கிருஷ்ணன், பலராமன், நந்தகோபர் மூவரும் அக்ரூரருடன் கிளம்ப, கோபர்கள் பலரும் அவர்களுடன் சேர்ந்துகொள்கின்றனர். யசோதை, கோபியர்கள் அனைவரும் கிருஷ்ணன் தங்களைவிட்டுப் போவதைக் குறித்துத் தாளாத வேதனை கொள்கிறார்கள்.
கோபியர்களில் முக்கியமானவளும், கிருஷ்ணனுக்குப் பிரியமானவளுமான ராதை அடைந்த வேதனைக்கு அளவேயில்லை. கம்சனைக் கொல்லும் பொருட்டு கிருஷ்ணன் கோகுலத்தைவிட்டுப் போன பின்பு, மறுபடி அவன் அங்கு திரும்பவே இல்லை.
கிருஷ்ணனைப் பிரிந்த ராதையின் மனநிலை குறித்துப் பல இலக்கியங்கள் உருவாகியுள்ளன. அவற்றுள் ஜயதேவரின் அஷ்டபதி மிகவும் முக்கியமானது. கண்ணனை நினைத்து ராதை ஏங்குவது, முழுமுதற்பொருளை நினைத்து மனித மனம் ஏங்குவதற்கு ஒப்பானதாகக் கொள்ளவேண்டும்.
நதிநீரில் கிருஷ்ணனும் பலராமனும்
கிருஷ்ணன், பலராமன், நந்தகோபர், கோபர்கள் அனைவரும் அக்ரூரருடன் மதுராவை நோக்கிப் போகிறார்கள். வழியில் ஒரு இடத்தில் மனத்தில் சஞ்சலத்துடன் இருந்த அக்ரூரர் ரதத்தை நிறுத்திவிட்டு மதிய நேரப் பூஜை செய்யும் பொருட்டு நதிக்கரைக்குச் செல்கிறார்.
கிருஷ்ணரும் பலராமரும் ரதத்தில் அமர்ந்து பேசிச் சிரித்துக்கொண்டிருக்கின்றனர். நதியை அடைந்த அக்ரூரர் நதிநீரைக் கைகுவித்து எடுத்தபோது, தன் கைநீரில் கிருஷ்ணனும் பலராமனும் ரதத்தில் அமர்ந்து பேசிச் சிரித்துக்கொண்டிருக்கும் காட்சி தரிசனமாகிறது.
திடுக்கிட்டுப் போன அக்ரூரர் ரதம் நின்ற இடத்தைத் திரும்பப் பார்த்தபோது அங்கு கிருஷ்ணனும் பலராமனும் அமர்ந்து அதேபோல் பேசிச் சிரித்துக்கொண்டிருந்ததைக் காண்கிறார்.
மறுபடியும் கையில் தேங்கியிருந்த நீரைப் பார்த்தபோது அங்கு அதே காட்சி தெரிகிறது. பிறகு குனிந்து நதியைப் பார்த்தபோது நதியெங்கும் பார்த்தவிடமெல்லாம் அதே காட்சி. தன் உடலெங்கும் இனம் புரியாத சந்தோஷம் பரவ, அக்ரூரர் நதிக்குள் பாய்கிறார்.
அங்கே அவர் கண்ட காட்சி! ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகள் விரித்து நீண்டிருக்க, சுற்றிலும் ஒளி பாய மகாவிஷ்ணு படுத்திருக்கும் தரிசனம் விரிகிறது. காலடியில் மகாலக்ஷ்மியும் சுற்றிலும் நாரதரும் மற்ற முனிவர்களும் தேவர்களும் பண்ணிசைத்துக் கொண்டிருக்கும் காட்சி அவர் கண்முன்னே விரிகிறது. சொல்லவொண்ணாப் பரவசம் உடலையும் மனத்தையும் நிறைக்கிறது.
கிருஷ்ணர், பலராமர் இருவரைப் பற்றிய உண்மையும் அவருக்கு அந்த நேரத்தில் தெளிவாகிறது. நதியைவிட்டு வெளியே வருகிறார். ரதம் நின்றிருந்த இடத்துக்குத் திரும்பியவரின் கண்களில் அருவியென நீர் வழிகிறது.
அவர்கள் இருவரின் கால்களிலும் நெடுஞ்சாண்கிடையாக விழுகிறார். அவர்களிருவரையும் அங்கே வைத்துக்கொண்டு, பூஜை செய்வதற்காக அவர்களை விட்டுவிட்டு நதிக்கரைக்குச் சென்ற தனது அறியாமையை நினைத்து மனம் வெதும்புகிறார் அக்ரூரர். அவரை நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறான் கிருஷ்ணன்.
நதி என்பது என்ன?
பயணம் தொடர்கிறது. மதுராவை அடைந்ததும் தன் இல்லத்துக்கு வருமாறு கிருஷ்ணனையும் பலராமரையும் வேண்டுகிறார் அக்ரூரர். கம்சனை வதம் செய்துவிட்டு நிச்சயம் வருவதாக இருவரும் வாக்களிக்கின்றனர்.
மேற்கொண்டு கம்சனை வதம் செய்துவிட்டு உக்ரசேனரை மறுபடியும் அரியணையில் அமர்த்துகிறார்கள் அந்தச் சகோதரர்கள். இது கதை. இது என்ன செய்தியைச் சொல்ல விழைகிறது என்று பார்ப்போம்.
எந்த ஒரு புராணக் கதையிலும் நதி என்று ஒன்று வந்தாலே அது பிரக்ஞையின் ஓட்டம், வாழ்வின் ஓட்டம், காலத்தின் ஓட்டம், இவற்றைத்தான் குறிக்கும். இந்தக் கதையிலும் ஒரு நதி வருகிறது.
கூடவே இருந்த கிருஷ்ணரையும் பலராமரையும் ரதத்தில் விட்டுவிட்டுத் தன் நியமங்களைச் செய்யும் பொருட்டு அக்ரூரர் அந்த நதிக்கரைக்குச் செல்கிறார். அங்கே அவருக்கு முக்கியமான ஒரு தரிசனமும் அது சார்ந்த உண்மையும் புரிகிறது.
பேருண்மையின் தரிசனம்
பிரபஞ்சப் பிரக்ஞையின் வெளிப்பாடான கிருஷ்ணரும் பலராமரும் உடனிருக்க, அந்த உண்மை தெரியாமல், அவர்களை விட்டு நீங்கி, நதிக்கரையில் இருக்கும்போது அவருக்கு முதலில் கைநீரில் காட்சி தெரிகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தக் காட்சியைக் கண்டவுடன் அக்ரூரர் நீருக்குள் பாய்ந்து குதித்ததுதான்.
நம் வாழ்வின் ஓட்டத்தில் பலருக்கு அவ்வப்போது தன்னைப் பற்றிய உண்மை சிறு குறிப்புகளாகத் தெரியவருவது சகஜம். ஆனால், பெரும்பாலானோர் அந்தக் குறிப்புகளின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ளாமல் கடந்து சென்றுவிடுகிறோம்.
ஆனால் வெகு சிலர் அந்தக் குறிப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை விடாமல் பற்றிக்கொண்டு அது காட்டும் திசையில் அந்தப் பாதையைத் தொடர்ந்து செல்கிறார்கள். சிலர் முழு வீச்சுடன் அக்ரூரரைப்போல் அதற்குள் பாய்ந்து இறங்கிவிடுகிறார்கள். அவர்களுக்குத்தான் பேருண்மையின் தரிசனம் கிடைக்கிறது.
இதில் விசேஷம் என்னவென்றால் தனக்குள்ளேயே, தன்னிடத்திலேயே இருக்கும் உண்மையை, வாழ்வின் ஓட்டத்தில் சென்று, வேறு ஒருவரின் உதவியால் அடையாளம் கண்டு தேடிக் கைப்பற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் பெரும்பாலோர் உண்மையின் தடயங்களைத் தொலைத்துவிட்டு அல்லல் படுகின்றனர்.
நதிக்கரையில் கைநீரில் அக்ரூரருக்குத் தெரியும் காட்சி என்பது நம் வாழ்வின் சிறு அனுபவங்களில், மேலோட்டமாகப் பார்ப்பதற்கு முக்கியத்துவம் ஏதுமில்லாததுபோல் தெரியும் அனுபவங்களில், பிரபஞ்ச உண்மையின் தடயங்கள் கிடைக்க முடியும் என்பதுதான்.
நம் கவனம் எதை நோக்கி இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் நம் வாழ்வனுபவங்களில் கிடைக்கும் குறிப்புகளை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பது இருக்கிறது.
நம் நண்பர் ஒருவரை ஒரு கூட்டத்தில் தேடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். மிகவும் முக்கியமாக அப்போது அவரைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்னும் நிர்ப்பந்தம். அத்தனை கூட்டத்திலும் அவர் முகம் மட்டுமே நம் மனக்கண் முன்னால் நிலைத்து நிற்கும் காரணத்தால் அவரை நாம் கண்டுகொள்ள முடிகிறது.
அவர் முகத்தைத் தவிர வேறு எந்த முகம் கண்ணில் தென்பட்டாலும் அதை உடனே மனம் விலக்கிவிடுகிறது. அதுபோன்ற ஒன்றுபட்ட உள்ளத்தோடு, குவிந்த கவனத்தோடு நாம் அடைய விழையும் உண்மையைத் தேடினால் அது கிடைப்பது சாத்தியமாகிறது.
காற்று வீசவேண்டுமானால் நம் வீட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் நன்றாகத் திறந்து வைக்கவேண்டும். காற்று வீசுவது நம் கையில் இல்லை.
ஆனாலும் கதவுகளைத் திறந்து வைக்காமல் போனால் காற்று வீசும்போது அது உள்ளே நுழைய முடியாமல் போய்விடும். கதவைத் திறந்து வைப்பது நம் கையில்தான் இருக்கிறது. அதைச் செய்தால் போதும்.
(கதவைத் திறப்போம்) கட்டுரையாசிரியர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT