Published : 11 Sep 2014 01:14 PM
Last Updated : 11 Sep 2014 01:14 PM
ரமணரைத் தரிசிக்கப் பலரும் காத்திருந்தனர். அவர்களுள் வெளிநாட்டவரும் சிலர். ரமணர் மெல்ல நடந்து வந்தார். எல்லோரும் எழுந்து நின்று இரு கரம் கூப்பி வணங்கினர்.
பசுமாடு ஒன்று அவரை நெருங்கி நின்றது. அதைத் தன் கரங்களால் வருடிக்கொடுத்தார். அது தன் கண்களை மூடி ஒரு யோகியைப் போல அசைவற்று நின்றது.
அவர் தாய்மையோடு பக்தர்களைப் பார்த்தவாறு மெல்ல வந்து ஒரு திட்டின் மீது அமர்ந்தார். பக்தர்கள் தரையில் அமர்ந்தனர்.
ஒவ்வொருவரும் தன்மீது ரமணரின் அருட்பார்வை நின்று போகாதா என்ற ஏக்கத்தோடு இருந்தனர்.
சற்றுத் தொலைவில் ஒரு வெளிநாட்டுக்காரர் தரையில் அமர முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். பின்னர் ஒரு திட்டின் மீது அமர்ந்துவிட்டார். சுற்றியிருந்த சிலர் அவரைப் பார்வையாலேயே பழித்தனர்.
அதை உணர்ந்த ஒரு ஆசிரமத் தொண்டர், சாமிகளுக்குச் சமமாக உட்காரக் கூடாது எனக் கண்டித்து வெளியில் அனுப்பிவிட்டார். இது பலருக்கும் சரி என்றே பட்டது. இதைத் தொலைவில் இருந்த ரமணர் கவனித்துவிட்டார்.
அந்தப் பணியாளரை அருகில் வரும்படி கையசைத்தார். அங்கு என்ன நடந்தது எனக் கேட்டறிந்தார்.
தரையில் அமர்ந்தால் மரியாதை, மேலே உட்கார்ந்தால் மரியாதை கிடையாது என்று யார் கற்றுக் கொடுத்தது என்று பணியாளிடம் கேட்டார். மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த குரங்கைக் காட்டி, அதை நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேட்டு அந்த வெளிநாட்டு மனிதரை அழைத்துவரச் சொன்னார்.
வெளியேற்றப்பட்ட அயல்நாட்டுப் பயணி மிகுந்த ஆவலோடு ரமணரை நெருங்கி வந்தார். ரமணர் தன் கண்களாலேயே அந்த மனிதரின் ஆன்மாவை வருடிக் கொடுத்தார்.
இவைதான் மரியாதை என்று பட்டியலிட்டு அதை எல்லாரிடமும் எதிர்பார்க்கிற எண்ணமே மனச்சுமை என்ற பாடத்தை ரமணர் இதன் மூலம் எளிமையாகப் புரியவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT