Published : 18 Sep 2014 01:28 PM
Last Updated : 18 Sep 2014 01:28 PM
நம்முடைய மடத்துக்கு அம்பாள் காமாக்ஷி ரொம்ப முக்கியம். ஜீவநாடி அவள்தான். அவளைப் பற்றி ஐநூறு ச்லோகம், ‘மூக பஞ்சசதீ' என்று.
அதைப் பண்ணிய மூகர் அவளையே முதல் சதகத்தில் ஒரு இடத்தில் ‘குருமூர்த்தே' என்று கூப்பிட்டு ‘உனக்கு நமஸ்காரம்மா!' என்று சொல்லியிருக்கிறார். குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி அவளுடைய க்ருபையாலேயே அத்வைத ஞானம் சித்திப்பதை பஞ்சசதீயில் அநேக இடங்களில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
முதல் சதகத்தில் துர்காம்பாள், சாமுண்டேச்வரி, அன்னபூர்ணேச்வரி, வாராஹி முதலிய பல ரூப பேதங்களாகவும் காமாக்ஷியையே சொல்லிவிட்டு, ஏறக்குறைய முடிக்கும் இடத்தில், ‘அம்மா, உன்னுடைய க்ருபையால் சிலபேர் குரு சரணத்தில் சரணாகதி பண்ணி, அதனால் சகுணாபாசனையோ, நிர்குணோபாசனையோ எதுவோ ஒன்றால் ஏணியில் ஏறிப்போவது போலப் போய் மோக்ஷம் என்னும் அரண்மனை உப்பரிகையில் வாசம் செய்கிறார்கள்' என்று சொல்லியிருக்கிறார்.
ஸத்க்ருத-தேசிக-சரணா: ஸபீஜ-நிர்பீஜ-யோக-நிச்ரேண்யா|
அபவர்க-ஸெளத-வலபீம் ஆரோஹந்த்யம்ப கே (அ) தவ க்ருபயா||
‘ஸெளதவலபி' என்றால் அரண்மனை மேல் மாடம். ‘ஸெளதம்' என்றால் அரண்மனை நேர் அர்த்தம், ‘சுதையால் ஆனது. சுதைக் கட்டிடம்' என்பது. சுதை, சுதா சம்ஸ்க்ருத வார்த்தை. அதற்கு அம்ருதம் என்பதுதான் முக்கியமான அர்த்தம். ஜில்லென்று இதமாக உள்ள அம்ருதப் பேரையே வெந்து வேக்காடாக்கும் சுண்ணாம்புக் கலவைக்குப் பேராகக் கொடுத்திருக்கிறது.
நல்லதில்லாத ஒன்றை மங்கள மாகச் சொல்லவேண்டும் என்று அதற்கு நேரெதிராக உள்ள நல்ல வஸ்துவின் பேரில் சொல்லும் வழக்கமுண்டு. அடிமண்டுவை ‘ப்ருஹஸ்பதி' என்கிற மாதிரி. ‘மங்கல வழக்கு', Euphemism என்று இதைச் சொல்வார்கள். வேதாந்தமாகப் பார்த்தால், கெட்டதைக் கூட நல்லதாகப் பார்க்கவேண்டும் என்ற சம பாவனை வருவதற்காக இப்படிச் சொல்வது எனலாம்.
சுலோகத்தில் மோக்ஷத்தைச் சொல்லும்போது சுதை மாளிகை என்று ‘சுதா' போட்டதில் உள்ளர்த்தமிருக்கிறது. (‘ஸுதா' என்பதே பெயரெச்சத்தில் ‘ஸெளத' என்றாயிருக்கிறது.) அம்பாளை யோக மார்க்கத்தில் உபாஸனை செய்யும்போது முடிவாக சிரஸ் உச்சியில் ப்ராணசக்தி பரமாத்ம சக்தியோடு இரண்டறக் கலந்து மோக்ஷம் சித்திக்கும். அந்த சமயத்தில் அங்கே சுதாதாரை, அம்ருததாரை, பெருக்கெடுக்கும்.
அதையும் குறிப்பிடுவதாகவே ‘ஸெளத' வலபி என்று கவி போட்டிருக்கிறார். யோகம் என்று நிர்குணமாகப் பண்ணும்போது சுதாதாரை பெருக்கெடுக்கும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு சாதனை செய்யப்படுகிறது.
அதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் ப்ரேம பக்தியிலேயே சகுணமாக உபாசித்தாலும் அவள் அந்த உச்ச ஸ்தானத்துக்கு ப்ராண சக்தியை ஏற்றி அம்ருத தாரையில் முழுக்கடிக்கத்தான் செய்வாள். இந்த சகுணம், நிர்குணம் இரண்டையுமே ‘ஸபீஜம் நிர்பீஜம்' என்று சுலோகத்தில் சொல்லியிருப்பது. அடியிலிருந்து உச்சிக்கு ப்ராணசக்தி ஏறுவதால் ஏணியில் ஏறிப்போவதைச் சொல்வதும் பொருத்தமாயிருக்கிறது. ‘நிச்ரேணி' என்ற வார்த்தைக்கு ஏணி என்று அர்த்தம். ‘நிச்ரேண்யா'-'ஏணியினால்', ‘ஏணி வழியாக`.
ச்ரேணி என்றால் வரிசை. அதிலிருந்துதான் ஏணி என்ற வார்த்தை வந்திருக்கிறது. ‘ச்ரமணர்' என்பது 'அமணர்' என்றும் 'ச்ராவணி' என்பது 'ஆவணி' என்றும் ஆகிறமாதிரி ‘ச்ரேணி' என்பது 'ஏணி' ஆகிறது. பராசக்தியின் க்ருபை இருந்தால்தான் சத்குரு கிடைப்பதும், அவரிடம் சரணாகதி பண்ணத் தோன்றுவதும். அதைத்தான் 'ஸத்க்ருத தேசிக சரணா தவ க்ருபயா' என்று சொல்லியிருக்கிறார்.
இங்கே சத்குரு என்பதற்கு ‘தேசிக' என்ற வாரத்தையையே போட்டிருக்கிறது என்று காட்ட வந்தேன். மோக்ஷஉச்சிக்கு ஏற்றிவிடக்கூடிய சக்தியுள்ளவராக ‘தேசிகர்' இருக்கிறார். அம்பாள் க்ருபையால் தேசிகர் கிடைத்து அவரிடம் சரணாகதி செய்வதையே மூகர் சொன்னாரென்றால், காளிதாசர் அம்பாளையே தேசிக ரூபிணியாகச் சொல்லியிருக்கிறார். ‘ச்யாமளா தண்டகம்' பண்ணிய அவர் ‘ச்யாமளா நவரத்னமாலா' என்ற ஸ்தோத்தரமும் செய்திருக்கிறார். அதில்,
தயமாந தீர்க்க நயநாம்
தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்
என்று குரு ஸ்வரூபிணியாக அவளைச் சொல்லியிருக்கிறார். ‘தயமான' என்பதில் வருகிற ‘தய'வை 'தர்சிதாப்யுதயாம்' என்று திருப்பி அழகாக சப்தாலங்காரம்-சொல்லணி- செய்திருக்கிறார். அம்பாளுடைய அழகான நீண்ட நேத்ரங்களில் தயை பெருகுகிறது. அப்படி தயாகடாக்ஷம் செய்கிறவள் தேசிக ரூபத்தில் - குரு ஸ்வரூபிணியாக-வந்து அப்யுதயத்தைக் காட்டுகிறாள் என்கிறார். ‘அப்யுதயம்' என்றால் நல்ல எழுச்சி.
‘சூர்ய உதயம்' என்பதை சூர்யன் எழுந்தான் என்கிறோம். ‘உதயம்-எழுச்சி. அப்யுதயம்- உயர்வு பொருந்திய எழுச்சி. ‘தர்சித அப்யுதயாம்' என்பதற்கு இரண்டு தினுசாக அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அம்பாள் தன்னுடைய அனுக்ரஹத்தின் மேலான எழுச்சியை பக்தனுக்குக் காட்டுகிறாள் என்பது ஒன்று. இன்னொன்று பக்தனுக்கு அவனுடைய மேலான அத்யாத்ம எழுச்சியைக் காட்டுகிறாள்.
அதாவது ‘த்சிக சப்தத்திற்கேற்ப, அவன் ஆத்யாத்மிகமாக உயரே எழும்ப வழிகாட்டுகிறாள் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். தயாகடாக்ஷத்தைச் சொல்லி உடனே தேசிக ஸ்வரூபத்தைச் சொல்வதில் நிரம்பப் பொருள் பொதிந்திருக்கிறது. கண்பார்வைதான் ஒருத்தரை வழிநடத்திச் செல்வது.
கண்ணில்லாதவரை வேறெவராவது தானே பிடித்து நடத்திச் செல்ல வேண்டியிருக்கிறது? ஆகையால் கண்ணே நம்மை அழைத்துப் போவதாக ஆகிறது. கண் காட்டிக் கொடுக்கும்படிதான் கால் நடப்பது. ‘நயனம்' என்கிற வார்த்தைக்கும் வழிநடத்திப் போவது, முன்னே சென்று வழி காட்டுவது, ‘லீட்' பண்ணுவது என்றுதான் அர்த்தம்.
நம் ஒவ்வொருவருடைய கண்ணும் அவரவருக்குத்தான் வழிகாட்டி அழைத்துப் போகிறது. அம்பாளுடைய கண்ணோ அதிலிருந்து பெருகும் தயாகடாக்ஷத்தால் லோகத்து ஜனங்களையெல்லாம் ச்ரேய மார்க்கத்தில் வழிகாட்டி அழைத்துப் போகிறது.
உத்தம குருவாயுள்ள எவருமே சிஷ்யர்களுக்குக் கடாக்ஷமாத்திரத்தால் தீக்ஷ தந்து நல்வழி நடத்திச் செல்லமுடியும். அதற்கு ‘நயன தீக்ஷ' என்றும் ‘சக்ஷ தீக்ஷ' என்றும் பெயர். சக்ஷ என்றாலும் கண்தான். மீனாக்ஷியம்மன் சக்ஷ தீக்ஷ தரும் குருவாகவே மஹான்கள் அநுபவத்தில் கண்டிருக்கிறார்கள்.
ஒரு தாயார் மீன் தான் இட்ட முட்டையைக் கண்ணால் பார்த்தே பொறிக்க வைத்துவிடும் என்று நம்பிக்கை.முட்டை பொரிந்ததும் உள்ளேயிருந்த கரு முழு பிராணியாகிறது. அப்படியே மீன்போன்ற நயனங்களைக் கொண்டது மீனாக்ஷியுடையவையே. அவளைக் குறித்துத்தான் காளிதாஸர் இந்த நவரத்னமாலையைப் பாடினார். ஆகையால் அவளுடைய தயா கடாக்ஷத்தை அவர் சொல்லும்போதே குருவாக அவள் சக்ஷ தீக்ஷ தருவதை மறைமுகமாகத் தெரிவித்து விடுகிறார்.
அப்புறம் வெளிப்படையாகவே ‘தேசிக ரூபேணே தர்சிதாப்யுதயாம்' என்று சொல்லிவிடுகிறார். ஞானாம்பிகையாக உள்ள அவள் தேசிக ரூபத்தில் எல்லோருக்கும் அருள்புரிந்து நல்லவழியில் போகப் பண்ணும்படி பிரார்த்தனை செய்வோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT