Published : 18 Nov 2025 06:02 AM
Last Updated : 18 Nov 2025 06:02 AM
சென்னை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இதனால், சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து, தைமுதல் தேதி மகரஜோதி தரிசனமும் விமரிசையாக நடைபெறும்.
இந்நிலையில், கார்த்திகை மாதத்தின் முதல் நாளான நேற்று மண்டல பூஜை தொடங்கியது. இதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து, தீபாராதனை காட்டப்பட்டு சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பொதுவாக, மார்கழி, தை மாதங்களில் சபரிமலை செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவது வழக்கம். ஒரு மண்டல காலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும் அவர்கள், பின்னர் இருமுடி கட்டிக்கொண்டு, பாதயாத்திரையாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். நேற்று கார்த்திகை முதல் நாள் என்பதால், ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்தனர்.

இதனால், சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம், கே.கே.நகர், அண்ணா நகர், ராஜா அண்ணாமலைபுரம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மாதவரம் பால் பண்ணை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களிலும் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
முதல்முறையாக சபரிமலைக்குச் செல்லும் கன்னிசாமிகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷத்துடன் மாலை அணிந்துகொண்ட பக்தர்கள், ஐயப்பனை தரிசித்து, விரதத்தை தொடங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT