Published : 18 Nov 2025 07:04 AM
Last Updated : 18 Nov 2025 07:04 AM
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால வழிபாடு நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. புதிய மேல்சாந்தி கோயில் நடையைத் திறந்துவைத்து வழிபாடுகளை மேற்கொண்டார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று அதிகாலை முதலே மண்டலகால வழிபாடுகள் தொடங்கின. புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்ற பிரசாத் நம்பூதிரி ஐயப்பன் கோயில் நடையையும், மனு நம்பூதிரி மாளிகை புரத்தம்மன் கோயில் நடையையும் திறந்து வைத்தனர்.
இதையடுத்து, சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த முன்தின அலங்காரங்களை களைந்து, நிர்மால்ய பூஜை, அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர், கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, நெய் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், முதல்கால பூஜை எனப்படும் உஷத் பூஜையில் ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, உச்சி கால பூஜை நடைபெற்றது. பகல் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் 3 மணி முதல் இரவு 10.45 மணி வரை தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற்றன.
முதல்நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பம்பா பாலம், கணபதி கோயில், நீலிமலை பாதை, நடைப்பந்தல் போன்ற இடங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டது. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பெரிதும் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.
சந்நிதான கொடிமரம் அருகே திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் `சபரிமலை டைரியை' வெளியிட்டார். ரூ.80, ரூ.220, ரூ.330 விலையில் இவை தேவஸ்தான ஸ்டால்கள் அனைத்திலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
வனப் பாதைகள் திறப்பு: சபரிமலையில் பாதயாத்திரை பக்தர்களுக்கான வனப் பாதை நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து சத்திரம் மற்றும் அழுதகடவு பாரம்பரிய வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. கடந்த மகரவிளக்கு பூஜைக்குப் பிறகு இந்த வழித்தடம் பயன்பாடின்றியே கிடந்ததால் விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
எனவே, காலையில் வனப்பகுதி வழியே சென்ற பக்தர்களின் குழுக்களுக்கு முன்பாக துப்பாக்கி ஏந்திய வனத் துறையினர் சென்றனர். வனத் துறை துணை இயக்குநர் சஞ்சீபு, வனச்சரக அலுவலர் பென்னி, பிரிவு அலுவலர் பிரசாந்த் உள்ளிட்டோர் பக்தர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதேபோல, அழுதகடவு வனப் பாதையிலும் பக்தர்கள் நேற்று அதிகளவில் சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “குளுக்கோஸ், பிஸ்கெட் உள்ளிட்ட எந்த வகையிலும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவரக் கூடாது. மசாலா உள்ளிட்ட உணவுகளின் வாசனைக்கு விலங்குகள் வர வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
சத்திரம் நுழைவுபாதையில் காலை 7 முதல் 1 மணி வரையே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதிகபட்சம் 4 மணி நேரத்துக்குள் வெளியேறி விட வேண்டும். வயதான, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பக்தர்களை வனத் துறைக் குழுவினர் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT