Published : 18 Nov 2025 12:07 AM
Last Updated : 18 Nov 2025 12:07 AM
திருப்பதி: திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார்.
பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் தொடங்கியது. நேற்று முன்தினம் ஆகமவிதிகளின் படி அங்குரார்ப்பன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து நேற்று கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் யானை சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, உற்சவ முர்த்தியாக பத்மாவதி தாயார் அருகே வீற்றிருக்க, பிரம்மோற்சவ கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நேற்றுமாலை, ஆந்திர அரசு தரப்பில், மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண் ரெட்டி பட்டு வஸ்திரங்களை தலை மீது சுமந்து வந்தபடி, அவற்றை தேவஸ்தான ஆகம வல்லுநர்களிடம் ஒப்படைத்தார்.
சின்ன சேஷ வாகனத்தில் தாயார்: இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு, சின்ன சேஷ வாகனத்தின் மீது பத்மாவதி தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன சேவையின் முன்பு, காளைகள், குதிரைகள், யானைகள் செல்ல, ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாடியபடி உடன் செல்ல, இவர்களுக்கு பின், பல மாநிலங்களை சேர்ந்த நடனக் கலைஞர்கள் நடனமாடியபடி சென்றனர். மாட வீதிகளில் கூடியிருந்த திரளான பக்தர்கள் தாயாருக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
மலர் கண்காட்சி: பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருச்சானூரில் கோயிலுக்கு எதிரே உள்ள வெள்ளிக்கிழமை தோட்டத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர், தோட்டக்கலை துறை சார்பில் கண்கவர் மலர் காட்சியை அமைத்திருந்தனர். இதனை நேற்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இங்கு ஆயுர்வேத கண்காட்சி, சிற்பக்கலை கண்காட்சிகளும் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஜொலிக்கும் திருச்சானூர்: பிரம்மோற்சவ விழா நேற்று 17-ம் தேதி தொடங்கி, வரும் 25-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளதை
யொட்டி, திருச்சானூர் நகரம் முழுவதும் மின் விளக்கு களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. முகப்பு கோபுரம் உட்பட நகரின் முக்கிய இடங்களில் மின் விளக்கு கட் அவுட்கள், தோர ணங்கள், மலர் அலங்காரங்கள் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT