Last Updated : 16 Nov, 2025 06:58 PM

 

Published : 16 Nov 2025 06:58 PM
Last Updated : 16 Nov 2025 06:58 PM

மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்

குமுளி: மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச.27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. இதற்காக இன்று(நவ.16) மாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபம் ஏற்றி, மங்கல இசை முழங்க நடையைத் திறந்துவைத்தார். பின்பு 18-ம் வழியே கீழிறங்கி ஆழிக்குண்டத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரூ உள்ளிட்டோர் தீபம் ஏற்றினர்.

அருண்குமார் நம்பூதிரியின் பணிக்காலம் இன்றுடன் முடிவடைந்ததால் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்திகள் பிரசாத் நம்பூதிரி, மனு நம்பூதிரி ஆகியோரை பொறுப்பேற்கச் செய்யும் வகையில் அவர்களின் கையைப்பிடித்து 18-ம்படி வழியே சந்நிதானத்துக்கு அழைத்து வந்தார்.

அங்கு இருவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு புதிய மேல்சாந்திகள் மீது புனித தீர்த்தம் தெளித்து மூலமந்திரத்தை காதில் கூறி பதவி ஏற்க செய்தார். இருவரும் ஓராண்டுக்கு சபரிமலையிலே தங்கி வழிபாடுகளை மேற்கொள்ள உள்ளனர். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு கோயிலில் வேறு வழிபாடுகள் இன்றி இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

நாளை(நவ.17) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வழிபாடுகளை மேற்கொள்ள உள்ளார்.

தொடர்ந்து அபிஷேகம், கணபதி ஹோமம், நெய் மற்றும் சந்தன அபிஷேகம் நடைபெறும். பின்பு மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு 3 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பல்வேறு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

மண்டல கால வழிபாடு தொடங்கியதை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சரண கோஷங்களுடன் ஆரவாரமாக வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் நாளான நேற்று ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது. பிற்பகலிலே பம்பை, எரிமேலி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் நெரிசல் அதிகரித்தது. பொதுவாக மாலையில்தான் பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிற்பகலிலே மலையேற அனுமதிக்கப்பட்டனர். இதனால் நீலிமலை, மரக்கூட்டம், அப்பாச்சிமேடு, நடைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது.

வனப்பாதைகள் நாளை திறப்பு: சத்திரம், எரிமேலி, அழுதகடவு உள்ளிட்ட வனப்பாதைகள் நாளை காலை 8 மணி முதல் திறக்கப்பட உள்ளது. வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பதோ, அதிக இரைச்சலுடன் பயணிப்பதோ கூடாது. வழியில் நீர் நிலைகளில் கவனமுடன் நீராட வேண்டும். பக்தர்கள் இப்பாதையை அடுத்தடுத்து பயன்படுத்த உள்ளதால் பொதுவெளிகளை எந்த வகையிலும் அசுத்தம் செய்யக் கூடாது. வனப்பாதையை விட்டு விலகிச் செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x