Published : 10 Nov 2025 08:47 PM
Last Updated : 10 Nov 2025 08:47 PM
தேனி: சபரிமலையில் மண்டல கால வழிபாடு தொடங்க உள்ள நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை அதீதமாக அலங்கரிக்கவோ, கூடுதல் விளக்குகளை பொருத்தவோ கூடாது என்று பத்தினம் திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவ.16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவ.17-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் தொடங்க உள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் இவர்களின் பாதுகாப்பு, தரிசனம் மற்றும் உரிய வசதிகளை செய்து தருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கான பல்வேறு விதிமுறைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
தரிசனத்துக்கு முன்பதிவு அவசியம். அதில் குறிப்பிட்ட நேரத்தை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். அப்போதுதான் நெரிசல் தவிர்க்கப் படும். முன்பதிவு செய்யாமல் வரும் அனைவருக்குமே ஸ்பாட் புக்கிங் அளிக்க முடியாது. வரையறை இல்லாத கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த ஆண்டு இந்த விதிமுறை கடுமையாக பின்பற்றப்படும்.
ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் வரும் வகையில் பயணங்களை திட்டமிடுவது அவசியம். செய்ய வேண்டியவை மலையேறும் போது ஒவ்வொரு 10 நிமிடத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் ஓய்வு எடுக்கவும். மரக்கூட்டம், சரம் குத்தி, நடைப்பந்தல் வழியே சந்நிதானம் செல்லவும். பதினெட்டாம் படிக்குச் செல்கையில் வரிசை முறையை பின்பற்றுவது அவசியம்.
தரிசனம் முடித்து திரும்பும்போது நடைப் பந்தல் மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும். கழிப்பறைகளை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். டோலி தேவைப்படுவோர் தேவசம் கவுண்டரில் மட்டும் பணம் செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
வாகனம் பழுது, விபத்து, மருத்துவ அவசரம், மிருக ஆபத்து, திருட்டு/குற்றம், காணாமல் போனோர் போன்ற அவசர நிலைகளில் 14432 ஹெல்ப் லைன் எண்ணில் போலீசை தொடர்புகொள்ளலாம். பம்பா, சந்நிதானம் மற்றும் யாத்ரிக பாதைகள் சுத்தமாக வைத்திருக்கவும். ஒதுக்கப்பட்ட நிறுத்தும் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். குழந்தைகள், முதியவர்கள் கழுத்தில் முகவரி மற்றும் தொடர்பு எண்கொண்ட அடையாள அட்டைகளை அணிவிக்கவும்.
செய்யக் கூடாதவை: கோயில் வளாகத்தில் மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம். புகைபிடித்தல், மது, புகையிலை உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். வரிசையில் செல்லும் போது ஓட வோ, முண்டியடித்தபடி செல்லவோ கூடாது. ஆயுதங்கள் அல்லது வெடிப்புப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். கழிவுகளை குப்பைத் தொட்டிகளுக்கு வெளியே போடக்கூடாது.
பதினெட்டம்படியில் தேங்காய் உடைக்க வேண்டாம். 18ம் படியில் ஏறும் போது மண்யிட கூடாது. அப்பர் திரு முற்றம் அல்லது தந்த்ரிநாடா பகுதிகளில் ஓய்வெடுக்க வேண்டாம். நடைப்பந்தல் மற்றும் லோயர் திருமுற்றம் பகுதிகளில் பாய், போர்வைகளை விரிக்கக்கூடாது. புனிதமான பம்பையில் ஈர ஆடைகளை விட்டுச் செல்லக் கூடாது. இவ்வாறு தேவசம் போர்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்தினம் திட்டா மாவட்ட கணகாணிப்பாளர் ஆர்.ஆனந்த் கூறுகையில், ”பக்தர்கள் நெரிசலனின்றி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே விதிமுறை முறையாக பின்பற்ற வேண்டும். பக்தர்கள் அடுத்தடுத்து இந்த இடத்தை பயன்படுத்த உள்ளதால் ஒவ்வொரு பக்தரும் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் ஓய்வு எடுத்த பிறகே வாகனங்களை இயக்க வேண்டும். வாகனங்களின் பதிவு எண்ணை மறைத்து எந்தவித அலங்காரமோ, கூடுதல் முகப்பு விளக்குகளையோ பயன்படுத்தக் கூடாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT