Published : 31 Oct 2025 10:03 AM
Last Updated : 31 Oct 2025 10:03 AM
திருமலை: வருடாந்திர புஷ்ப யாக நிகழ்ச்சி நேற்று திருமலையில் வெகு சிறப்பாக நடந்தது.
இதனையொட்டி நேற்று காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேதமாய் மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக 9 டன் மலர்க் கூடைகளை தேவஸ்தான ஊழியர்கள், அதிகாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் திருமலையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா முடிந்த பின்னர், உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம். கார்த்திகை மாதம் பெருமாளின் திருவோணம் நட்சத்திரத்தில் இந்த புஷ்ப யாகம் நடத்தப்படும். இதை கடந்த 15-ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து அரசர்கள் நடத்தி வந்துள்ளனர். அதன்பின்னர், எந்த காரணத்தினாலோ புஷ்பயாகம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த புஷ்ப யாகத்தை மீண்டும் நடத்தி வருகிறது.
இந்த புஷ்ப யாகத்தில் 16 வகை பூக்களும், 6 வகை துளசி, தவனம் போன்ற இலைகளும் உபயோகப்படுத்தப்பட்டன. இதில் 5 டன் மலர்கள் தமிழகத்தில் இருந்தும், தலா 2 டன் மலர்கள் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர். இவ்வாறு அணில்குமார் சிங்கால் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT