Published : 31 Oct 2025 07:11 AM
Last Updated : 31 Oct 2025 07:11 AM
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நவ. 17-ல் தொடங்கி டிச. 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக நவ. 16-ல் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. ஒரு மண்டலம் விரதமிருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய ஏராளமாள பக்தர்கள் ஆர்வம் காட்டி வருவதால் மண்டல, மகர பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இதையொட்டி, பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன் தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து தேவசம் போர்டு செயலர் எம்.ஜி.ராஜமாணிக்கம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பக்தர்கள் தற்போது ஆன்லைன் மூலம் சேவைகளைப் பெற்று வருகின்றனர். அவர்கள் வசதிக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய, பலமொழி தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில், தரிசனம், தங்கும் வசதி, அவசரத் தேவை, மருத்துவ வசதி, காலநிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதில் உள்ள எண்களில் தொடர்பு கொண்டும் பலனடையலாம்.
கூடுதலாக, 1500 வாகனங்கள்.. நிலக்கல்லில் வழக்கமாக நடப்பாண்டு கூடுதலாக 1,500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாகன பாதுகாப்பு, தடையற்ற இயக்கத்தை கண்காணிக்கும் வகையில் புதிதாக 3 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். இங்கிருந்து பத்தினம்திட்டா, எரிமேலி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். அதேபோல, நடப்பாண்டு கேரள அரசு சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
நிலக்கல்-பம்பை இடையே சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும். இதய பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் தேவசம்போர்டு சார்பில் வழங்கப்படும். இதற்கான நிதி ஆதாரத்துக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் விருப்பக் கட்டணமாக ரூ.5 பெறப்படும்.
பதிவு செய்யும் பக்தர்கள் கேரளாவுக்குள் நுழைந்து, வெளியேறும்வரை காப்பீட்டுத் திட்டத்தில் பல வசதிகளைப் பெறுவர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி புக்கிங் செய்பவர்கள் நெரிசல் இல்லாத நேரங்களில் தரிசனத்துக்கு அனுப்பப்படுவர். எனவே, முடிந்தவரை ஸ்பாட் புக்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். விரைவில் தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT