Last Updated : 27 Oct, 2025 12:46 PM

 

Published : 27 Oct 2025 12:46 PM
Last Updated : 27 Oct 2025 12:46 PM

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் ‘தண்டு விரதம்’ இருந்து பக்தர்கள் வழிபாடு

படங்கள்: நா.தங்கரத்தினம்

பழநி: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திங்கட்கிழமை (அக்.27) மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் ‘தண்டு விரதம்’ இருந்து வழிபாடு நடத்தினர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக்.22-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மலைக்கோயிலில் மூலவர், உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டதை தொடர்ந்து விநாயகர், துவாரபாலகர்கள், நவ வீரர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திங்கட்கிழமை (அக்.27) மாலை கிரிவீதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று (அக்.27) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், காலை 4.30 மணிக்கு விளா பூஜை மற்றும் படையல் நைவேத்தியம் நடைபெற்றது.

சூரசம்ஹாரத்தையொட்டி, காலை 11 மணி வரை மட்டுமே மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். கந்த சஷ்டியை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் இன்று காலை முதலே திருஆவினன்குடி கோயிலில் ‘தண்டு விரதம்’ இருந்து வழிபாடு செய்தனர்.

அதாவது, வாழைத்தண்டு, இஞ்சி, ஆப்பிள், ஆரஞ்சு,திராட்சை உள்ளிட்ட பழ வகைகள், தயிர் ஆகியவற்றை கொண்டு பிரசாதம் தயார் செய்து சுவாமிக்கு படைத்து விரதத்தை நிறைவு செய்தனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பழநி மலைக்கோயிலில் மாலை 3 மணிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் சூரனை வதம் செய்ய சின்னக்குமார சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து சந்நிதிகளும் அடைக்கப்படும்.

பராசக்திவேலை திருஆவினன்குடி முருகன் கோயிலுக்கு சென்று பூஜை செய்த பின், மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் சூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் ஆகியோரை சின்னக்குமார சுவாமி வதம் செய்ய உள்ளார்.

சூரசம்ஹாரம் முடிந்ததும் இரவு 9 மணிக்கு மேல் ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவும், மலைக்கோயிலுக்கு சென்ற பின் சம்ப்ரோட்சனம் மற்றும் அர்த்தஜாம பூஜையும் நடைபெற்றது. நாளை (அக்.28) காலை 10 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகருக்கும், பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 7 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x