Published : 27 Oct 2025 06:46 AM
Last Updated : 27 Oct 2025 06:46 AM
திருப்போரூர்: கந்தசஷ்டியை முன்னிட்டு திருப்போரூர், வல்லக்கோட்டை மற்றும் குன்றத்தூர் முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு கந்தசாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதையொட்டி, தினமும் லட்சார்ச்சனை நடைபெறுவதால், பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில், கந்த சஷ்டியின் கடைசி நாளான இன்று (27-ம் தேதி) மாலை 5 மணிக்கு மேல் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வல்லக்கோட்டை: இதேபோல், கந்தசஷ்டி 5-ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு, வல்லக்கோட்டை முருகப்பெருமான் உள்ள கிராமத்தில் சடையீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளி வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இன்று சூரசம்ஹாரமும், நாளை கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.
குன்றத்தூர்: குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சூரபத்மனை வதம் செய்வதற்காக, குன்றத்துார் முருகன் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள கந்தழீஸ்வரர் கோயிலில் முருகன் வேல் வாங்கும் விழா நேற்று மாலை நடந்தது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை சூரசம்ஹாரம் விழா நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT