Published : 26 Oct 2025 01:54 PM
Last Updated : 26 Oct 2025 01:54 PM
கோவை இஸ்கான் வளாகத்தில், 60 ஆயிரம் சதுரடி பரப்பளவில் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் கட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.
கோவை பீளமேடு கொடிசியா அருகே, இஸ்கான் ஸ்ரீ ஜெகந்நாதர் (ஹரே கிருஷ்ணா) கோயில் உள்ளது இங்கு ஸ்ரீஜெகந்நாதர், ஸ்ரீ பலதேவர், சுபத்ரா தேவி, ராதா கிருஷ்ணர் ஆகியோர் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். இக்கோயில் வளாகத்தில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் 60 ஆயிரம் சதுரடி பரப்பளவில், ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் கட்டும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்கோயில் கட்டுமானப் பணி கடந்த 2001-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு ரூ.30 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கோயில் கட்டுமானத்தின் பெரும் பகுதி நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடத்துக்குள் பணிகளை முடிக்க இஸ்கான் அமைப்பினரால் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவை இஸ்கான் கோயிலின் உப தலைவர் மதுகோபால்தாஸ் கூறியதாவது: இக்கட்டிடம் தரைத்தளம், முதல் தளம், 2-ம் தளம் ஆகியவற்றை கொண்டதாகும். 20 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அமையும் முதல் தளம், 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், கர்ப்பகிரகம் 2,400 சதுரடி பரப்பளவில் ராதாகிருஷ்ணர், ஜெகந்நாதர், பலராமர், சுபத்ராதேவி ஆகியோர் வீற்றிருக்கும் இடமாகும். மேலும், இங்கு தெப்பக்குளம் அமைக்கப்படுவதோடு, ஸ்தல விருட்சமாக ‘தமால்’ மரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
மேலும், இரண்டாவது தளத்தில் 6 ஆயிரம் சதுரடி பரப்பளவில் இளைஞர்கள், அடுத்த தலைமுறைகள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், டைனமிக் எக்ஸ்சிபிட்டர் அரங்கு அமைக்கப்பட உள்ளது. தொழில்நுட்ப வசதியுடன், ஏ.ஐ. நுட்பத்தில், எளிமையான கேள்வி, பதில்களுடன் இந்த அரங்கு அமையும். கோயிலின் நான்கு திசைகளில் இருந்தும் நுழைவுவாயில் கோபுரம் அமைக்கப்பட உள்ளது. இவை தென்னக சிற்ப அமைப்பில், பளிங்கு கற்களால் அமைக்கப்படுகிறது. கோயிலின் உள்ளே 140-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூண்களிலும் பாகவத ஸ்லோகங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
தரையில் இருந்து 108 அடி உயரத்தில் விமானம் உள்ளது. அதில், 13 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட சுதர்சன சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் பொதுமக்களுக்கு ஆன்மிக போதனைகள் குறித்த அரங்கு அமைக்கப்படுகிறது. இக்கோயில் தமிழகத்தில் மிகப்பெரிய ராதாகிருஷ்ணன் கோயிலாக இருக்கும். இஸ்கான் கோயிலில் இது ஒரு மைல்கல் வளர்ச்சியாகும்.
மேலும், கோவையில் மேலும் ஒரு கோயிலாக இல்லாமல், இது கலாச்சாரம், கல்வி மையமாக திகழப் போகிறது. வேத கலாச்சாரத்தை, பாரம் பரியத்தை எளிமையாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கிய இடமாக இது அமையும். பக்தி வேதாந்த அகாடமியின் கல்விக் கூடம் ஒரு பகுதியாக உள்ளது. கோவை இஸ்கான் தலைவர் பக்தி விநோத சுவாமி மகாராஜ் தலைமையில் மேற்கண்ட பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT