Published : 17 Oct 2025 05:41 PM
Last Updated : 17 Oct 2025 05:41 PM
சென்னை: வடபழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.21-ல் தொடங்குகிறது. மேலும், 27-ம் தேதி சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது.
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி. அதிலும் குறிப்பாக ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி திதி, முருகப்பெருமானுக்கு உரிய மகா கந்த சஷ்டியாக கருதப்படுகிறது. அந்த வகையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மகா கந்த சஷ்டி விழா வரும் 21-ம் தேதி வரசித்தி விநாயகரின் மூஷிக வாகன புறப்பாட்டுடன் தொடங்குகிறது.
22-ம் தேதி முதல் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடங்குகிறது. அதன்பின் மாலையில் யாக சாலை பூஜைகள் நடக்கின்றது. தொடர்ந்து, தினசரி காலை, மாலையில் இருவேளையும் பூஜைகள் நடைபெற்று, 27-ம் தேதி உச்சிக்காலத்துடன் பூர்த்தியாகிறது. மேலும், 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தினசரி இரவு மங்களகிரி விமானம், சந்திரபிரபை, ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், மங்களகிரி விமானத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.
விழாவின் பிரதான நாளான 27-ம் தேதி இரவு 8 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்வு நடக்கிறது. முருகப் பெருமான் படை சூழ, யானை, சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்வார். அதனைத் தொடர்ந்து, 28-ம் தேதி இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று, சுவாமி வீதி உலா நடைபெறும். பின்னர், இரவு 8 மணிக்கு மேல் திருக்கல்யாண விருந்து நடைபெறுகிறது.
தொடர்ந்து, 28-ம் தேதி முதல் நவ.1-ம் தேதி வரை சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. கோயில் லட்சார்ச்சனையில் பங்குபெற விரும்பும் பக்தர்கள் அர்ச்சனை ஒன்றுக்கு ரூ.250 செலுத்தி முருகனின் அருட்பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் தக்கார் எல்.ஆதிமூலம், செயல் அலுவலர் இரா.ஹரிஹரன் ஆகியோர் தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT