Published : 10 Oct 2025 06:39 AM
Last Updated : 10 Oct 2025 06:39 AM
சென்னை: நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு, வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு வர இக்கால அறிஞர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தியுள்ளார்.
பாரம்பரிய குருகுல முறையின்கீழ் 16 தேர்வுகளை உள்ளடக்கிய ஆறு ஆண்டு கால பாடத்திட்டமாக, தெனாலி சாஸ்திர பரீட்சை உள்ளது. இந்த சாஸ்திர பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 12 சாஸ்திர அறிஞர்களை, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டி, ஆசி வழங்கினர்.
பாரம்பரிய சாஸ்திர சம்பிரதாயத்தை பாதுகாப்பதில் அதிக ஈடுபாடு கொண்டு, இந்தியா முழுவதும் பல்வேறு குருநாதர்களிடம் வேத பயிற்சி பெற்ற அறிஞர்களின் கல்வித் திறமை மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை, சான்றிதழ், வெகுமானம் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அனுக்கிரஹ பாஷணம் வழங்கிய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், “விரிவான பாடத்திட்டம், தேர்வு கட்டமைப்புக்குப் பெயர் பெற்ற தெனாலி சாஸ்திர பரீக் ஷா சபை, பாரம்பரிய சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்று தேர்ச்சி பெற ஆர்வம் கொண்ட மாணவர்களை ஊக்குவித்து வருகிறது.
ஆசிரியர்களுக்கு பாராட்டு: பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க உதவுவதன் மூலம் பல அறிஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை இந்த சபை வழங்க வேண்டும். சாஸ்திரங்கள் தொடர்பான ஆய்வு, ஒருவரை தூய்மையான மனதுடன் நற்செயல்கள் புரிய வைக்கும். நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு, வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு வர இக்கால அறிஞர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
சாஸ்திர கல்வியின் நோக்கத்தை உணர்ந்து, அதன் பழமையான பாரம்பரிய வடிவத்தைப் பேணிப் பாதுகாப்பதை தங்கள் கடமையாகக் கொண்ட அறிஞர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்” என்றார். மேலும், சமூக நலனுக்காகவும், தர்ம பிரச்சாரத்துக்காகவும் சாஸ்திர அறிவைப் பயன்படுத்துவதன் முக்கியவத்துவத்தை சுவாமிகள் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் காஞ்சி பல்கலை. வேந்தர் குடும்ப சாஸ்திரி, துணைவேந்தர் ஜி. ஸ்ரீநிவாசு, திருப்பதியில் உள்ள தேசிய சம்ஸ் கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலை. துணைவேந்தர் ராணி சதாசிவமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேத விற்பன்னர் ஸ்ரீ ராம்லால் சர்மா செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT