Published : 09 Oct 2025 05:57 PM
Last Updated : 09 Oct 2025 05:57 PM
தூத்துக்குடி: திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசியதாவது: ”திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் அக்.22ம் தேதி தொடங்கி அக்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்.27ம் தேதி மாலை 4 மணிக்கு சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட வேண்டும். திருச்செந்தூர் நகர பகுதியில் குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். கோயில் வளாகங்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக மாடுகளின் உரிமையாளர்களிடம் பேசி மாடுகளை வெளியில் விடாமல் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருச்செந்தூருக்கு நெல்லையில் இருந்து 60 பேருந்துகள், தூத்துக்குடியில் இருந்து 40 பேருந்துகள், மதுரையில் இருந்து 60 பேருந்துகள், ராஜபாளையத்தில் இருந்து 15 பேருந்துகள் உள்பட சுமார் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகள் திருச்செந்தூர் ஐ.டி.ஐ வளாகத்தில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். இதே போன்று நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரியில் இருந்து வரும் பேருந்துகளுக்கும் தனியாக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
4 ஆயிரம் போலீஸ்: கடலில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்காக கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை சார்பில் 5 படகுகளில் போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். செல்போன்கள் சீராக இயங்குவதற்காக 6 செல்போன் கோபுரங்கள் உள்ளன. மேலும் 2 நகரும் செல்போன் கோபுரங்கள் கோயில் வளாகத்தில் அமைக்கப்படும்.
விழாவின் போது பக்தர்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்படும். 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும். பக்தர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக காவல் துறையினர் உதவியுடன், அந்த பக்தரை அங்கிருந்து வெளியேற்றி கொண்டு வரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
தீயணைப்புத் துறை சார்பில் கோயில் வளாகத்தில் 7 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். அதே போன்று 40 கமாண்டோ வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள். பக்தர்கள் வரிசை முறையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக கோயில் பாதுகாப்புப் பணியில் 144 தனியார் காவலர்கள் உள்ளனர். இது தவிர முதல் 3 நாட்கள் கூடுதலாக 50 பேரும், அடுத்த 3 நாட்கள் கூடுதலாக 100 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் துறை சார்பில் சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழாவுக்கு முன்பு அனைத்து தெரு விளக்குகளும் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கவுதம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT