Published : 03 Oct 2025 07:11 AM
Last Updated : 03 Oct 2025 07:11 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் 8 நாட்களில் மட்டும் உண்டியலில் பக்தர்கள் ரூ.25 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்ததை தொடர்ந்து, திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பதி பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக பாடுபட்ட அனைத்து தேவஸ்தான அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள், துப்புரவு தொழிலாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரம்மோற்சவ விழா தொடங்கியதிலிருந்து அக்டோபர் 1-ம் தேதி வரையிலான 8 நாட்களில் மட்டும் ரூ.5.8 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். 26 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. 2.42 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 28 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உண்டியல் மூலம் ரூ.25.12 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் 4.4 லட்சம் பக்தர்கள் திருப்பதி-திருமலை இடையே பயணித்துள்ளனர். பிரம்மோற்சவ விழாவின்போது முதன்முறையாக 28 மாநிலங்களில் இருந்து 298 குழுவினர் வந்திருந்து மாடவீதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். இதில் மொத்தம் 6,976 பேர் பங்கேற்றுள்ளனர். கருட சேவைக்கு மட்டும் 780 கலைஞர்கள் 37 குழுக்களாக பிரிந்து மாட வீதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். 65 டன் மலர்கள் இந்த பிரம்மோற்சவ விழாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 36 எல்இடி தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டு வாகன சேவைகள் ஒளிபரப்பப்பட்டன. 3,500 வாரி சேவகர்கள் சிறப்பாக பணியாற்றினார்.
50 மருத்துவர்கள், 60 பாராமெடிக்கல் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினர். 14 ஆம்புலன்ஸ்கள் மருத்துவ சேவைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டன. 5,000 போலீஸார், 1,800 தேவஸ்தான கண்காணிப்பு ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டது. கருட சேவையன்று மட்டும் 16 உணவு வகைகள் மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. 2,800 துப்புரவு தொழிலாளர்கள் சிறப்பாக பணிபுரிந்தனர். இவ்வாறு பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT