Last Updated : 02 Oct, 2025 03:43 PM

 

Published : 02 Oct 2025 03:43 PM
Last Updated : 02 Oct 2025 03:43 PM

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

அரியலூர்: அரியலூரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடிலுள்ள ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி கோயிலில் 82 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட விழா நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.15.50 லட்சம், பொதுமக்கள் சார்பில் ரூ.3.10 லட்சம் என மொத்தமாக ரூ.18.60 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. இதையடுத்து தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

தொடர்ந்து தேரோட்டத்தையொட்டி செப்.23-ம் தேதி அரியலூர் கோதண்ட ராமசாமி கோயிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளும் வீதியுலா நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (அக்.2) காலை நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரோட்டம் தேரடி பகுதியில் இருந்து புறப்பட்டு, மாதா கோயில், சத்திரம் வழியாக மீண்டும் தேரடிக்கு வந்தடைந்தது.

தேரில் ஆண்டாள், அலமேலுமங்கை உடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில், கோயில் செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் சதீஸ்குமார், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலை வாணன், கோட்டாட்சியர் பிரேமி, வட்டாட்சியர் முத்து லெட்சுமி மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x