Published : 01 Oct 2025 06:56 AM
Last Updated : 01 Oct 2025 06:56 AM
திருமலை: மனிதர்களுக்கு தான் ஜாதி, மதம் பேதமெல்லாம். கடவுளுக்கு கிடையாது. இதைத்தான் திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யும் கைங்கர்யங்கள் நமக்கு போதிக்கிறது. இன்று பிரம்மோற்சவத்தில் காலை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இந்த தேரின் உச்சியில் சவர தொழிலாளர்கள் வழங்கும் தங்க குடைதான் அமைக்கப்படுகிறது. அதன் கீழ்தான் உற்சவ மூர்த்திகள் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கைங்கர்யங்களை உற்று நோக்கினால், ஜாதி, மதம் என்பது பெருமாளுக்கு கிடையாது என்பதை நாம் நன்கு அறிய முடியும். பல ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவைக்கு முன், கோயில் திறந்ததும் முதல் தரிசனம் யாதவ குலத்தவர்களுக்கு தான் வழங்கப்படுகிறது.
இதே போன்று இரவு நடை சாத்தப்படுவதற்கு முன் ஏகாந்த சேவையின்போது, கடைசியாக நாவிதரின் நாதஸ்வர இசை இசைத்த பின்னர் தான் பெருமாள் துயிலுறங்க செல்கிறார். ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் நடத்தப்படும் அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில், குண்டூரை சேர்ந்த ஷேக் மஸ்தான் எனும் பக்தர் வழங்கிய 108 தங்க புஷ்பங்களை கொண்டுதான் அந்த ஆர்ஜித சேவை கடந்த 1984-ம் ஆண்டு முதல் நடக்கிறது.
குயவர்கள் செய்யும் மண் சட்டியில் தான் தீபாவளி ஆஸ்தானமே நடைபெறுகிறது. பழங்குடி இனத்தவர்களின் குலதெய்வமாக கொண்டாடப்படும் ஹத்திராம் மடம் சார்பில் தான் இன்றளவும் தினமும் சுப்ரபாத சேவையில் வெண்ணை மற்றும் இதர பிரசாதங்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இப்படியாக பல ஜாதிகள், பிரிவினரின் கைங்கர்யங்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு காலம் காலமாக செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் தான் இன்று நடைபெற உள்ள தேர்த்திருவிழாவிலும், திருமலையில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பணியாற்றும் சவர தொழிலாளர்கள் சார்பில் வழங்கப்படும் தங்க குடையை ரதத்தின் உச்சியில் வைத்து ரதோற்சவம் நடத்தப்படுகிறது.
சிறப்பு பூஜைகள்: பல ஆண்டுகளுக்கு முன்பாக மரக்கட்டையில் இந்த குடை சவர தொழிலாளர்களால் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்க குடைதான் தேரின் உச்சியில் அமைக்கப்படுகிறது. பந்துலுகாரி வம்சத்தினர் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் காலத்தில் இருந்து தேருக்கு குடை வழங்கப்பட்டு வரும் ஐதீகம் இருந்து வந்துள்ளது. நேற்று மாலை தங்க குடைக்கு கல்யாண கட்டாவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து சவர தொழிலாளர்கள் அந்த குடையை ஊர்வலமாக கொண்டு சென்று, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இக்குடை இன்று தேரின் உச்சியில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT