Published : 28 Sep 2025 06:38 AM
Last Updated : 28 Sep 2025 06:38 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் இன்று இரவு பிரசித்தி பெற்ற கருடசேவை நடைபெற உள்ளது.
இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலைகள், கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் நேற்று மதியம் திருமலையை வந்தடைந்தன. தமிழக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், ஆச்சாரியார் ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் மங்கலப் பொருட்களை கொண்டுவந்தனர். இவற்றை ஜீயர்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்த மங்கலப் பொருட்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இவை கோயிலில் ஒப்படைக்கப்பட்டன. இந்த மலர் மாலைகளும், கிளியும் இன்று இரவு நடைபெற உள்ள கருடசேவையின் போது உற்சவர் அணிவது ஐதீகம். இது வழக்கமான பவுர்ணமி கருடசேவையில் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
இரு சக்கர வாகனங்களுக்கு தடை: கருடசேவையை முன்னிட்டு நேற்று இரவு 9 மணி முதல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு இருசக்கர வாகனங்கள் செல்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. 29-ம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி முதல் வழக்கம்போல் பைக்குகள் திருமலைப் பாதையில் அனுமதிக்கப்படும்.
கருட சேவையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆந்திர போக்குவரத்து கழகமும் நேற்று முதல் திருமலைக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. இன்று காலை முதல் மாட வீதிகளில் பக்தர்கள் வீற்றிருந்து கருடசேவையை காணும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மாட வீதிகளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் அமரலாம். அவர்களுக்கு இன்று 14 வகையான உணவுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் தண்ணீர், டீ, காபி, மோர் என பானங்களும் உடனுக்குடன் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
14 இடங்களில் கருடசேவையை காணும் வகையில் ராட்சத தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட உள்ளது. லட்டு பிரசாதம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க தினமும் 8 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் நேற்று முதல் திருமலை மற்றும் திருப்பதியில் 2026-ம் ஆண்டு தேவஸ்தான காலண்டர்கள், டைரிகள் விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT