Published : 27 Sep 2025 07:45 AM
Last Updated : 27 Sep 2025 07:45 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதியில் நாளை நடைபெறும் கருட சேவையின்போது மலையப்ப சுவாமிக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் நேற்று திருப்பதிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) தினசரி பூஜையின்போது ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதேபோல, மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சித்திரைத் தேரோட்டம், திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் கருட சேவையின்போது பெருமாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் மூலவர் வெங்கடேசப் பெருமாளும், உற்சவர் மலையப்ப சுவாமியும் அணிவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் நாளை (செப். 28) மலையப்ப சுவாமி மோகன அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை கருட சேவையின்போது ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிந்து மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்ட மாலை தயார் செய்யப்பட்டு, நேற்று பிற்பகல் ஒரு மணி அளவில் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT