Published : 25 Sep 2025 04:58 PM
Last Updated : 25 Sep 2025 04:58 PM

ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அறநிலையத் துறை அறிவிப்பு

கோப்புப் படம்

ராமேசுவரம்: ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் 600 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்க அக்.22-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022- 2023-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து, காசியில் உள்ள விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள், ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படுவர் என்றும், இதற்கான செலவினத் தொகையை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 2022- 2023-ம் ஆண்டில் 200 பேர்களும், 2023- 2024-ம் ஆண்டில் 300 பேர்களும், 2024 - 2025 ஆண்டில் 420 பேரும் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், 2025- 2026-ம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து காசி, விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து தலா 30 நபர்கள் வீதம் 600 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்து சமய அறநிலையத் துறையின் www.hrce.tn.gov.in என்ற வலைத் தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் அக்டோபர் 22ம் தேதிக்குள் மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் துவங்கும் இந்த ஆன்மிகப் பயணம் காசி தரிசனம் முடிந்து மீண்டும் ராமேசுவரம் வந்து ராமநாத சுவாமியை தரிசனம் செய்த பின்னரே நிறைவுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x