Published : 24 Sep 2025 07:43 AM
Last Updated : 24 Sep 2025 07:43 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்க உள்ளார். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 2-ம் தேதி சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைய உள்ளது.
பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்ல 24 மணி நேரமும் திருப்பதியில் இருந்து பேருந்து போக்குவரத்து வசதி, தலைமுடி காணிக்கை, மூலவரின் தரிசனம், அன்னபிரசாதம், வாகன சேவைகளை கண்டு களிக்க மாட வீதிகளில் சிறப்பு வசதிகளை தேவஸ்தானம் செய்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் ரு.50 முதல் 600 வரை மிக குறைந்த வாடகைக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக திருமலையில் 3,500 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இலவச மருத்துவ சேவை: பக்தர்களின் நலனுக்காக திருமலையில் தேவஸ்தானத்தின் அஸ்வினி மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு மாட வீதியில் 10-12 படுக்கை வசதி கொண்ட சிறு மருத்துவமனை தயார் செய்யப்பட்டுள்ளது. 8 ஆம்புலன்ஸ்கள், 50 மருத்துவர்கள், 60-க்கும் மேற்பட்ட பாராமெடிக்கல் ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இலவச பார்க்கிங் வசதி: திருமலைக்கு பிரம்மோற்சவ விழாவினை காண கார்கள், பைக்குகளில் வரும் பக்தர்களின் வசதிக்காக இலவச பார்க்கிங் வசதி ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் 24 மணி நேரமும் 4 ஆயிரம் வாகனங்கள் பார்க்கிக் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிக்கிறது.
திருமலையில் 100 அடிக்கு ஒரு தகவல் மையம் என அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தங்களின் சந்தேகத்தை கேட்கலாம். தலைமுடி காணிக்கை செலுத்த 1,150 சவர தொழிலாளர்கள் நியமனம் செய்யப்படுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4,700 போலீஸார், 2,000 தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள், 450 சீனியர் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். 3,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளன. தனியாக கமாண்ட் கண்ட்ரோல் அறை தயார் நிலையில் உள்ளது. பிரம்மோற்சவ விழாவினை காண வரும் பக்தர்களுக்கு மாட வீதிகளில் 14 விதமான அன்னதானம் விநியோகம் செய்யப்பட உள்ளது.
ஒரே சமயத்தில் 2 லட்சம் பக்தர்கள் வாகன சேவைகளை கண்டு களிக்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் அன்னதான கூடத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து 15 மணி நேரத்துக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
பிரம்மோற்சவ விழாவினையொட்டி, நேற்றிரவு அங்குரார்ப்பன நிகழ்ச்சி ஆகம சாஸ்திரத்தின்படி நடந்தது. இதனை தொடர்ந்து, ஏழுமலையானின் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வக்சேனர் ஆயுதங்களை தாங்கி 4 மாட வீதிகளில் பவனி வந்து பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பார்வையிட்டார். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகன சேவை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT