Published : 24 Sep 2025 01:06 AM
Last Updated : 24 Sep 2025 01:06 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர். முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் அக். 2-ம் தேதி நடைபெறுகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பல்லக்கில் கொடிப்பட்டம் வீதியுலா வந்து கோயிலை சேர்ந்தது. பின்னர், சன்னதிக்கு எதிரேயுள்ள கொடி மரத்தில் அதிகாலை 5.36 மணிக்கு ‘ஓம் காளி ஜெய் காளி’ என்ற பக்தி கோஷம் விண்ணைப் பிளக்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, கொடி மரத்துக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, பக்தர்கள் கோயில் பூசாரிகளிடம் காப்பு கட்டி, தாங்கள் விரும்பிய வேடங்களை அணிந்து, ஊர் ஊராகச் சென்று கோயிலுக்கு காணிக்கை வசூலிக்கத் தொடங்கினர். விழா நாட்களில் தினமும் இரவு அன்னை முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில், வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். 10-ம் நாள் விழாவான அக். 2-ம் தேதி முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
அக்டோபர் 3-ம் தேதி அதிகாலை கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோயில் முன்பு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், அதிகாலை 3 மணிக்கு அபிஷேக மேடையில் அபிஷேகமும் நடைபெறும். பின்னர், தேரில் அம்மன் பவனி வருகிறார். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதியுலா புறப்படுகிறார். மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோயிலுக்கு வந்து சேர்ந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT