Published : 23 Sep 2025 05:30 AM
Last Updated : 23 Sep 2025 05:30 AM
சென்னை: ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னையில் நேற்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் திருக்குடைகள் உபயமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை பூக்கடை சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் 21-ம் ஆண்டு திருக்குடை ஊர்வல தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. 11 வெண்பட்டுக் குடைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
20 லட்சம் பேர் தரிசனம்: ஹிந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்ஜி தலைமை வகித்தார். அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி வரவேற்றார். அவர் பேசும்போது, “இந்த பிரார்த்தனை குடைகளை 5 நாள் யாத்திரையில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பல்வேறு அச்சுறுத்தல்கள், இடைஞ்சல்களை கடந்து 21-வது ஆண்டாக திருப்பதி திருக்குடை ஊர்வலம் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுகிறது” என்றார்.
அனைவரையும் ரட்சிக்கும்: கர்நாடக மாநிலம் உடுப்பி பலிமார் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமி ஆசி வழங்கிப் பேசும்போது, “கடவுளுக்கு குடை அவசியம் இல்லை. மழை, வெயில் மற்றும் பிற இடையூறுகளில் இருந்து நம்மை அவர் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்து இதை அவருக்கு சமர்ப்பிக்கிறோம். தமிழக மக்கள் அனைவரையும் இந்த குடை ரட்சிக்கும்” என்றார். பின்னர், அனைவரும் கொடியசைத்து திருக்குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 5 மணி அளவில் குடைகள் கவுனி தாண்டின. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பின்னர், ஓட்டேரி, அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக சென்று காசி விஸ்வநாதர் கோயிலில் குடைகள் நேற்று இரவு வைக்கப்பட்டன.
பல்வேறு பகுதிகளை கடந்து செல்லும் குடைகள் இன்று இரவு வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோயிலிலும், நாளை இரவு திருமுல்லைவாயில் வெங்கடேஸ்வரா பள்ளியிலும் தங்குகின்றன. 26-ம் தேதி இரவு கீழ்திருப்பதியில் பத்மாவதி தாயாருக்கு 2 குடைகளும், 27-ம் தேதி காலை திருமலை திருப்பதியில் சுவாமிக்கு 9 குடைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT