Published : 23 Sep 2025 08:14 AM
Last Updated : 23 Sep 2025 08:14 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை (செப். 24) மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
நாளை புதன்கிழமை மாலை கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்படுகிறது. இதற்காக கொடி மரத்தில் சுற்றிலும் அமைக்கப்பட உள்ள புனித தர்பை புற்களையும் பிரம்மோற்சவ கொடியை கட்டுவதற்கான புனித கயிற்றையும் நேற்று தேவஸ்தான ஊழியர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அவற்றுக்கு பூஜை கள் செய்யப்பட்டு, கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவம் நாளை தொடங்குவதை முன்னிட்டு, இன்று செவ்வாய்க்கிழமை மாலை, வைகானச ஆகம விதிகளின்படி ஏழுமலையான் கோயிலில் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையடுத்து ஏழுமலையானின் படைத் தளபதி என்று அழைக்கப்படும் விஸ்வக்சேனர், பிரம்மோற்சவ ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் ஐதீகம் அடிப்படையில் ஆயுதங்களை ஏந்தி மாட வீதிகளில் உலா வருவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT