Published : 18 Sep 2025 05:31 AM
Last Updated : 18 Sep 2025 05:31 AM
சென்னை: திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருக்குடை உபய உற்சவ ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருமலை திருப்பதி ஏழுமலயான் கோயில் பிரம்மோற்சவ காலத்தில் தமிழகத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மலர்மாலை, வெண்பட்டு திருக்குடைகள் கருடச் சேவைக்காக சமர்ப்பிக்கப்படும்.
அதன்படி திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் - விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு சார்பாக, ஒவ்வோர் ஆண்டும் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு அழகிய வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான திருக்குடை ஊர்வலத்தின் தொடக்க விழா பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதற்கு விசுவ இந்து பரிஷத் வட தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் ரஞ்சித் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அழகிய 21 திருக்குடைகள் பொதுமக்கள் பக்தர்கள் வழிபாடுகளுடன் ஊர்வலமாகச் சென்று செப்டம்பர் 21-ம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோயிலிலும், மாலை 4 மணியளவில் திருப்பதி திருமலையில் தேவஸ்தான அதிகாரிகளிடமும் தமிழக மக்கள் பிரார்த்தனைகளுடன் சமர்ப்பிக்கப்படும் என்று திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஜி.ராமலிங்கம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT