Published : 15 Sep 2025 06:24 AM
Last Updated : 15 Sep 2025 06:24 AM

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபா அவதார தின நூற்றாண்டு விழா: 2026 நவம்பர் வரை பல்வேறு சேவைப் பணிகளுக்கு ஏற்பாடு

பகவான் சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா தொடர்பான தகவல்களை  சத்ய சாய் சேவா அமைப்பின் தேசியத் தலைவர் நிமிஷ் பாண்டியா சென்னையில் நிருபர்களிடம் விளக்குகிறார்.  சத்ய சாய்சேவா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோட்டீஸ்வர ராவ், தென்மண்டல பொறுப்பாளர் முகுந்தன், தமிழக தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: ஸ்ரீ சத்ய சாய் பாபா​வின் அவதார தின நூற்​றாண்டு விழா 2026 நவம்​பர் மாதம் வரை விமரிசை​யாக கொண்​டாடப்பட உள்​ளது. இதையொட்டி பல்​வேறு சேவைப் பணி​கள், விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் நடத்​தப்பட உள்​ளன.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்​பின் தேசி​யத் தலை​வர் நிமிஷ் பாண்​டியா நேற்று கூறிய​தாவது: பகவான் புட்​டபர்த்தி ஸ்ரீ சாய் பாபா​வின் அருளாசி​யுடன் ஆன்​மிக வழி​யில் அனை​வருக்​கும் அன்பை பகிர்ந்​து, இயலாதவர்​களுக்கு சேவை​யாற்​று​வதை நோக்​க​மாக கொண்​டுள்​ளோம்.

அவரது வழி​காட்​டு​தலின்​படியே கல்​வி, மருத்​துவ சேவை​களை மக்​களுக்கு இலவச​மாக வழங்கி வரு​கிறோம். திறன் மையங்​கள் மூல​மாக சுயதொழிலுக்​கான பயிற்​சிகளும் அளிக்​கப்​படு​கின்​றன.

இதற்​கிடையே, ஸ்ரீ சத்ய சாய் பாபா​வின் அவதார தினம் ஆண்​டு​தோறும் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்டு அவரது 100 வது அவதார தினத்தை முன்​னிட்டு நூற்​றாண்டு விழாவை விமரிசை​யாக கொண்​டாட முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி, நூற்றாண்டு விழா கடந்த ஏப்​ரல் 24-ம் தேதி தொடங்​கியது. இந்த நிகழ்ச்சி 2026 நவம்​பர் 23-ம் தேதி வரை நடை​பெறும்.

இந்த ஒன்​றரை ஆண்​டு​களில் ரத்த தான முகாம், மருத்​துவ முகாம் நடத்​துதல், மரம் நடு​தல், கலை நிகழ்ச்​சிகள் மூல​மாக விழிப்​புணர்வு ஏற்​படுத்​துதல் உட்பட பல்​வேறு செயல்​பாடு​கள் முன்​னெடுக்​கப்​படு​கின்​றன. குறிப்​பாக, புட்​டபர்த்​தி​யில் வரும் நவம்​பர் மாதம் நடை​பெற உள்ள நூற்​றாண்டு விழா​வில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்க உள்​ளனர். சென்னை ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் உள்ள ‘சுந்​தரம்’ ஆலயத்​தில் நவம்​பரில் ஒரு​வார காலத்​துக்கு பல்​வேறு சிறப்பு நிகழ்ச்​சிகள் நடத்​தப்பட உள்​ளன.

நூற்​றாண்டு விழாவை முன்​னிட்டு ஒரு கோடி மரங்​கள் நட இலக்கு வைக்​கப்​பட்​டது. தமிழகத்​தில் மட்​டும் 25,000 உட்பட நாடு முழு​வதும் இது​வரை சுமார் 40 லட்​சம் மரங்​கள் நடப்​பட்​டுள்​ளன. 1,000 மாற்​றுத் திற​னாளி​களுக்கு செயற்கை கை, கால்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் தமிழகத்​தில் 125 பேர் பலன் பெற்​றுள்​ளனர்.

இது​போல, இன்​னும் பல்​வேறு சேவைப் பணி​களை முன்​னெடுக்க உள்​ளோம். மேலும், இளைஞர்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தி, சிறந்த சமூக சூழலை உரு​வாக்​க​வும் அனை​வரும் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார். இந்த நிகழ்வில் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்​பின் ஒருங்​கிணைப்​​பாளர்​ கோட்​டீஸ்​வர ​ராவ்​, தென்​மண்​டல பொறுப்​​பாளர்​ முகுந்​தன்​, தமிழக தலை​வர்​ சந்​திரசேகரன்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x