Published : 08 Sep 2025 06:15 AM
Last Updated : 08 Sep 2025 06:15 AM
சென்னை: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில், மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் பெருவிழா நடைபெறுவது வழக்கம். 53-வது ஆண்டு பெருவிழா, கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து பக்த சபைகள் விழா, நற்கருணை பெருவிழா, தேவ அழைத்தல் விழா, உழைப்பாளர்கள் விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழா, ஆசிரியர்கள் விழா, குடும்ப விழா, அன்னையின் பிறப்பு பெருவிழா என ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகளும், ஜெப வழிபாடுகளும் காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று தேர் பவனி நடந்தது. மாலை நடந்த கூட்டுத் திருப்பலியில், சென்னை - மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பேசினார். கூட்டுத் திருப்பலியை தொடர்ந்து, தேர் பவனியை பேராயர் தொடங்கி வைத்தார். அலங்கரிக்கப்பட்ட மாதா தேர் பவனி, பெசன்ட் நகர் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டது. தேர் பவனியில் பங்கேற்ற பக்தர்கள், மரியே வாழ்க என கோஷம் எழுப்பினர்.
வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் தொடங்கி பெசன்ட் நகர் கடற்கரை சாலை, ஆல்காட் பள்ளி, பெசன்ட் நகர் டிப்போ வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேர் பவனி சென்று மீண்டும் மாதா ஆலயத்தை அடைந்தது. விழாவின் இறுதி நாளான இன்று, அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதில், காலை நடைபெறும் திருப்பலியில், அன்னைக்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. மாலை கொடியிறக்கத்துடன் பெருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT