Published : 07 Sep 2025 06:44 AM
Last Updated : 07 Sep 2025 06:44 AM
மூலவர்: துர்காபுரீஸ்வரர் அம்பாள்: காமுகாம்பாள் தல வரலாறு : கிடாத்தலை கொண்ட அசுரன், வேர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, அம்பாள் கடும் கோபத்துடன் போருக்குப் புறப்பட்டு, அசுரனின் தலையை வெட்டினாள். அது பூலோகத்தில் விழுந்த இடமே கிடாத்தலைமேடு. ஓர் உயிரைக் கொன்ற பழிதீர, அம்பாள் பூலோகத்துக்கு வந்து சிவபூஜை செய்தாள். பின்னர் இந்த லிங்கத்துக்கு துர்காபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது.
கோயில் சிறப்பு: அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பதற்காக தியானத்தில் இருந்த சிவனை எழுப்ப வேண்டியதால், மன்மதன், சிவன் மீது மலர்க்கணை தொடுத்தான். கோபம் கொண்ட சிவன் அவனை சாம்பலாக்கினார். பின்னர், ரதிமீது இரக்கம் கொண்டு அவன் அவளது கண்களுக்கு மட்டும் தெரியும்படி வரம் அளித்தார். அம்பிகை அவனுக்கு கரும்பு வில்லையும், மலர்க்கணைகளையும் திரும்ப அளித்தாள். காமனாகிய மன்மதனுக்கு அருள்புரிந்ததால் காமுகாம்பாள் என்று பெயர் பெற்று, அம்பாள் இத்தலத்தில் குடியிருக்கிறாள்.
துர்கை தனி சந்நிதியில் வடக்கு நோக்கி, கிடாத்தலையின் மீது நின்றபடி அருள்புரிகிறாள். கைகளில் சக்கரம், பரணம், வில், கத்தி, கேடயம் ஏந்தியிருக்கிறாள். ஸ்ரீசக்ர பூர்ண மகாமேருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துர்கைக்கு சிலை வடித்த சிற்பி. தேவிக்கு மூக்குத்தி வடிக்கவில்லை கனவில் வந்த துர்கை, தன் இடது நாசியில் துளையிடும்படி கட்டளை இட்டாள். பவுர்ணமியன்று சுமங்கலி பூஜையின்போது, துர்கையே வந்து சேலை பெற்றுச் செல்வதாக ஐதீகம்.
சிறப்பு அம்சம்: துர்கை சந்நிதிக்கு எதிரே 20 அடி உயர சூலம் உள்ளது. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்கள் தொழிலுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி சாமுண்டீஸ்வரியாக நினைத்து சூலத்தை வழிபடுகின்றனர். அமைவிடம்: தஞ்சாவூரில் இருந்து திருமணஞ்சேரி சென்று, அங்கிருந்து வடக்கில் பிரியும் சாலையில் 8 கிமீ சென்றால் கிடாத்தலைமேட்டை அடையலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6-10, மாலை 5-8 மணி வரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT