Published : 22 Aug 2025 08:50 AM
Last Updated : 22 Aug 2025 08:50 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு விரைவில் 121 கிலோ தங்க நகைகளை பெயர் வெளியிட விரும்பாத ஒரு பக்தர் காணிக்கையாக வழங்க உள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.140 கோடி முதல் ரூ150 கோடி என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ஏழுமலையானின் தீவிர பக்தர்களில் ஒருவர் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அதில் அவர் அதிக லாபத்தை ஈட்டினார். 60 சதவீத விற்பனையிலேயே அவருக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை லாபம் கிடைத்தது. இதனால் அந்த பக்தர், இதெல்லாம் திருப்பதி ஏழுமலையானின் கருணை என்பதை உணர்ந்து, ஏழுமலையானுக்கு 121 கிலோ எடையில் தங்க ஆபரணங்களை வழங்க முடிவு செய்தார்.
இது குறித்து அந்த பக்தர் என்னை நேரடியாக சந்தித்து ஒரு கடிதமும் கொடுத்தார். அப்போது தன்னுடைய பெயரை மட்டும் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 120 கிலோ தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படுவதை அப்போது நான் அவரிடம் எடுத்துரைத்தேன்.
அப்போது அவர் ஆச்சரியப்பட்டார். எனக்கு 121 கிலோ எடையில் சுவாமிக்கு ஆபரணம் வழங்க நினைத்தேன். அப்படியெனில் அவர் அணியும் ஒரு நாள் ஆபரண எடையை விட ஒரு கிலோ எடை அதிகமாகவே வழங்குகிறேன் என மகிழ்ச்சியுடன் கூறினார். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
தற்போது அந்த பக்தர் யார்? எனும் கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு சக்கரவர்த்திகள், சேர, சோழ, பாண்டிய, பல்லவர் அரசர்கள், பல குறுநில மன்னர்கள், சாளுக்கியர்கள், மஹந்துக்கள் என அரசர் காலம் முதல் தற்போதைய அம்பானி காலம் வரை பலர் தங்கம், வைரம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக வழங்கி உள்ளனர்.
இவை இன்றும் பிரம்மோற்சவம் போன்ற விசேஷ நாட்களில் உற்வசரான மலையப்பர் அணிந்து வீதி உலா வருவதை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். சமீப காலமாக அதிகமாக தங்க நகைகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்குவதால், திருப்பதி தேவஸ்தானம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. முன்கூட்டியே தக்க அனுமதி பெற்ற பின்னர் தான் தங்கம், வைரம் ஆபரணங்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இது மட்டுமல்லாமல் ஆண்டுக்கு ஒரு டன்னுக்கும் மேல் உண்டியல் மூலமாக மட்டுமே ஏழுமலையானுக்கு தங்க நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். சுவாமிக்கு உள்ள ஆபரணங்களை தவிர உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் ஆபரணங்கள் தற்போது அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 23.5.2010-ல் 1075 கிலோ தங்கத்தை திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் டெபாசிட் செய்தனர். 2022 செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி திருப்பதி ஏழுமலையான் பெயரில் 10,258 கிலோ தங்க நகைகள் பல அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஆண்டுதோறும் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தில் வைர கவச அலங்காரத்தில் பவனி வரும் உற்சவர் மலையப்பர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT