Last Updated : 14 Aug, 2025 06:31 PM

 

Published : 14 Aug 2025 06:31 PM
Last Updated : 14 Aug 2025 06:31 PM

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: ஆக.23-ல் தேரோட்டம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் இன்று (ஆக்.14) காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன.

பின்னர் கொடிப்பட்டம் கோயிலில் இருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளிலும் வீதிஉலா சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தது. தொடர்ந்து, கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலை 5.17 மணிக்கு கோயில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் காப்பு கட்டிய சிவகுகநாதன் பட்டர் ஆவணித் திருவிழா கொடியேற்றினார்.

பின்னர் கொடிமர பீடத்துக்கு எண்ணெய், தையலம், திரவிய பொடி, மஞ்சப்பொடி, மாபொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், விபூதி, சந்தானம் மற்றும் பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கொடிமர பீடம் தர்ப்பை புல்லாலும், வண்ண மலர்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6.40 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ மத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள், கோயில் இணை ஆணையர் சு.ஞானசேகரன், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 5-ம் திருநாளான வரும் 18-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. 7-ம் திருநாளான 20-ம் தேதி மாலையில் சுவாமி சண்முகர் சிவப்பு நிற பட்டு உடுத்தி சிவன் அம்சமாக தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

அதேபோல் 8-ம் திருநாளான 21-ம் தேதி அதிகாலையில் சுவாமி வெண்பட்டு அணிந்து பிரம்மா அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். அன்று பகலில் பச்சை நிற பட்டு உடுத்தி பெருமாள் அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 10-ம் திருநாளான 23-ம் தேதி காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x