Published : 08 Aug 2025 04:55 PM
Last Updated : 08 Aug 2025 04:55 PM
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவது வழக்கம். குறிப்பாக, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து அம்மனை தரிசித்து, அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை ஏந்தியும், மா விளக்கு, பறக்கும் காவடி எடுத்தும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்நிலையில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வரும் 15-ம் தேதி நடைபெற்ற உள்ளது. இதையொட்டி, கோயிலில் இன்று காலை கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, செப்புக் கொடி மரத்திற்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில், கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, கோயில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி, நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, பக்தர்களுக்கு தங்கும் வசதி, தாய் மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகிய ஏற்படுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, கோயில் செயல் அலுவலர் இளங்கோ மற்றும் பரம்பரை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்று நீதிமன்ற அறிவிப்பு வெளியானதால் இருக்கன்குடி ஊர்த் தலைவருக்கு மரியாதை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், யாருக்கும் மரியாதை வழங்க அனுமதிக்க முடியாது என கூறி இருக்கண்குடி ஊர் பொதுமக்கள் கடைகளை அடைத்து இருக்கண்குடி கோயில் புறக் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கோயில் பரம்பரை அறங்காவலர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கு பின்பு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT