Published : 05 Aug 2025 05:55 AM
Last Updated : 05 Aug 2025 05:55 AM
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்குக்கு மறுநாள் 19-ம் தேதியன்று, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இவ்விழாவையொட்டி காவிரி ஆற்றில் இருந்து நேற்று முன்தினம் தீர்த்தம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு அம்மன் காவிரி ஆற்றில் தீர்த்தவாரிக்கு எழுந் தருளினார். நேற்று 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திவிட்டு வரிசையாக அமர்ந்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து கோயில் பரம்பரை பூசாரி பெரியசாமி, பாதக்குரடு (ஆணி செருப்பு) அணிந்து, அம்பு போட்டவுடன் (இரும்புப் பட்டை கம்பியால் அடித்துக் கொள்ளுதல்) அருள் பெற்று, பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார்.
இதில், சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தலையில் மஞ்சள் வைக்கப்பட்டது. சற்று அதிக காயமடைந்த பக்தர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் தலையில் தையல் போடப்பட்டது.
இவ்விழாவில், இந்து சமய அறநிலையத் துறை திருப்பூர் இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன், கரூர் உதவி ஆணையர் ரமணிகாந்தன், செயல் அலுவலர் நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT