Published : 04 Aug 2025 05:43 AM
Last Updated : 04 Aug 2025 05:43 AM
சென்னை: சென்னையில் மெரினா கடற்கரை மற்றும் நீர்நிலை பகுதிகளில் ஏராளமான மக்கள் குவிந்து நேற்று ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். புதிய தாலி மாற்றிக்கொண்டு வழிபாடு செய்தனர்.
ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. நீர்வளம் பெருகி, பயிர்கள் செழிக்க வேண்டும், மக்கள் வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தித்து, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் இந்த நாளில் பூஜை செய்து வழிபடுவார்கள்.
தமிழகத்தில் திருச்சி காவிரி கரை, மதுரை வைகை ஆற்றங்கரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரை உள்ளி்ட்ட இடங்களில் ஆடிப்பெருக்கு விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், கோவளம் கடற்கரை பகுதிகள், ஏரிக்கரைகளில் மக்கள் ஏராளமாக குவிந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். புத்தாடை உடுத்தி வந்த புதுமண தம்பதியர், தாலியை மாற்றிக்கொண்டு வழிபாடு நடத்தினர். திருமணம் ஆகாத இளம்பெண்கள், மஞ்சள் சரடு அணிந்து பிரார்த்தனை செய்து, சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபட்டனர்.
ஆடிப்பெருக்கை ஒட்டி மயிலாப்பூர் கோலவிழி அம்மன், முண்டகக்கண்ணி அம்மன், பாரிமுனை காளிகாம் பாள், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன் உட்பட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
நீர்நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். வீடுகளில் கூழ் தயாரித்து, பொதுமக்களுக்கு வழங்கினர். தவிர, ஞாயிறு விடுமுறை நாள் என்பதால், கடற்கரை,ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT