Published : 01 Aug 2025 05:54 AM
Last Updated : 01 Aug 2025 05:54 AM
திருப்பத்தூர்: பழமையான கோயில்களில் ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்டே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் அஷ்டாங்க விமானத்துக்கு தங்கத் தகடு பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
3 தளங்கள் கொண்ட இந்த விமானத்தில் தங்கத் தகடு பதிப்பதற்காக 18 ஆண்டுகளுக்கு மேலாக தங்கம் சேகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவ. 14-ம் தேதி தங்கத்தகடு பதிக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில், திருக்கோஷ்டியூர் கோயிலுக்கு நேற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், அஷ்டாங்க விமானத்தில் பொருத்தப்பட உள்ள தங்கத் தகட்டில் தங்க இலைகளை ஒட்டினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறநிலையத் துறை செயல்பாடுகளில் எனக்கு குறை ஒன்றும் தெரியவில்லை. நாம் ஒற்றுமையாக சாமி கும்பிட்டால் தகராறு வராது. அரசும் கோயில் விவகாரத்தில் தலையிடாது. நமக்குள் தகராறு ஏற்படுவதால், கோயில்களை அரசு எடுத்துக் கொள்கிறது.
கடவுள் இல்லை என்று சொல்லக் கூடியவர்கள், அதிக கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தியதை எண்ணி மகிழ்ச்சிடைய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்பதை கடவுள் நிரூபித்துள்ளார். பழமையான கோயில்களில் ஆகம விதி மற்றும் நடைமுறைக்கு உட்பட்டே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். அவரவர் இஷ்டத்துக்கு கட்டப்படும் தனியார் கோயில்களில் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT