Published : 31 Jul 2025 01:28 PM
Last Updated : 31 Jul 2025 01:28 PM

குற்றாலம் குழல்வாய்மொழி அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் குற்றால நாதர் உடனுறை குழல்வாய்மொழி கோயில் அமைந்துள்ளது. சுவாமி நடராஜரின் திருநடனம் நடைபெற்ற பஞ்ச சபைகளில் இக்கோயில் சித்திரசபையாக விளங்குகிறது.

புல்லாங்குழலில் இருந்து எழும் இசையை விட இனிமையான குரலை உடையவள் என்பதால் குழல்வாய்மொழி அம்மன் என பெயர் பெற்றாள். உயரமான கருவறையில் அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். வலது கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை கீழே தொங்க விட்டபடியும் புன்முறுவல் பூத்த முகத்தவளாய் காட்சி தருகிறாள்.

அம்பிகையின் சக்தி பீடங்களுள் இத்தலம் தரணி பீடம் என்று சிறப்பிக்கப்படுகிறது. அகத்தியர் இங்கிருந்த திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றியபோது திருமாலுக்கு வலப்புறம் இருந்த தேவியை குழல்வாய்மொழி அம்மனாகவும், பூதேவிவை பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு சக்ர அமைப்பில் உள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள்.

பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இந்த பீடத்துக்கு தரணி பீடம் என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் நவசக்தி பூஜை செய்கின்றனர். அப்போது பால், வடை பிரதானமாக படைக்கப்படும்.

பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்துக்கு பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அம்பாளுக்கு சந்தனக்காப்பு செய்யப்படுகிறது. இரவு எண்ணெய் தீப விளக்குகளின் ஒளியில் அம்பிகையின் தரிசனம், பார்ப்பவரை பரவசம் அடையச் செய்யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x