Published : 28 Jul 2025 10:57 AM
Last Updated : 28 Jul 2025 10:57 AM

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்: ‘கோவிந்தா, கோபாலா’ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை 9.10 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து நான்கு ரதவீதிகள் வழியாக தேர் இழுத்தனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புக்குரியதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் அவதார விழாவான புரட்டாசி பிரம்மோற்சவம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி உற்சவம், ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகியவை முக்கியமான திருவிழாக்களாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 சக்கர தேரில் ஆண்டாள் ரெங்கமன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவில் தினசரி காலை ஆடிப்பூர கொட்டகையில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றது. ஆடிப்பூர திருவிழா 5ம் நாள் காலை பெரியாழ்வார் மங்களா சாசனமும், இரவு 5 கருட சேவையும், 7-ம் நாள் விழாவில் சயன சேவையும் நடைபெற்றது. 8-ம் நாள் விழாவான முயற்சி இரவு ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும், ஆண்டாள் பூ பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

இன்று காலை ஆண்டாள் ரெங்கமன்னார் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, சர்வ அலங்காரத்தில் ஆடிப்பூரத் தேரில் எழுந்தருளினர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை அழகர் கோயில் கள்ளழகர் பெருமாள் சீர்வரிசையாக அனுப்பி வைத்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆண்டாள் ரங்கமன்னாருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காலை 9.10 மணிக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து நான்கு சதவீதிகள் வழியாக தேர் இழுத்தனர்.

தென்காசி எம்பி ராணி, சிவகாசி மேயர் சங்கீதா, எம்எல்ஏக்கள் தங்கப்பாண்டியன், ஆர்.ஆர் சீனிவாசன், மான்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அறங்காவலர் குழு உறுப்பினர்கள், செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x