Published : 27 Jul 2025 06:57 AM
Last Updated : 27 Jul 2025 06:57 AM
மூலவர்: மெய்கண்டமூர்த்தி தல வரலாறு: 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேசும் திறனற்ற அழகுமுத்து என்பவர் கோயிலில் தோட்டப் பணிகளை செய்து வந்தார். குமரனின் நிவேதனப் பிரசாதத்தை மட்டுமே உண்டு, வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அர்த்தஜாம மணி அடித்துவிட்டு அங்கேயே உறங்கிவிட்டார். பூஜை முடிந்த பிறகு அர்ச்சகர் அவரிடம் கூறிவிட்டு, பிரசாதத்தை அவர் அருகில் வைத்துவிட்டு சென்றார். அந்த பிரசாதம் தேரைக்கு உணவானது. இரவு 1 மணி அளவில் விழித்த அவருக்கு பசி மிகுதியானது. வாய் பேச முடியாத அவர், பூட்டிய கோயிலுக்குள் அங்கும் இங்கும் கத்தியபடி அலைந்தார்.
அழகுமுத்துவின் அழுகுரல் கேட்ட முருகன், பாலன் உருவத்தில் வந்து அவருக்கு பஞ்சாமிர்தம் அளித்து பேசும் திறனைஅருளினார். அழகுமுத்து தனது கணீர் குரலால் பல கோயில்களுக்குச் சென்று பாடினார். வயதானபின்னர் வைகாசி விசாகதினத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் 1,000கால் மண்டபத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவரது ஆவி நேராக நாகை மெய்கண்ட மூர்த்தி முருகன் சந்நிதிக்கு வந்தது. மாலை சாயரட்சை தீபாராதனை சமயத்தில் முருகனோடு ஐக்கியமானார் அழகுமுத்து. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக தினத்தில் ஐக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது.
கோயில் சிறப்பு: நாகையில் உள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயிலில் மேகராஜனின் உபயத்தில் பூஜைகள் நடந்தன. காலப்போக்கில் கோயில் விக்கிரகங்கள் பூமியில் புதைந்துவிட்டன. புதுச்சேரியில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய துபாஷி ஆனந்தரங்கம் பிள்ளையின் கனவில் தோன்றிய முருகன், தாம் இருக்கும் இடத்தை உணர்த்தி, நாகை காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்குவீதியில் தமக்கு கோயில் அமைக்க பணித்தார். அதன்படி இந்த குமரன் கோயில் அமைக்கப்பட்டது. தோல் நோய் நீக்குபவராக முருகன் விளங்குகிறார். அமைவிடம்: நாகை - தஞ்சை சாலையில் நாலுகால் மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7-12, மாலை 5-9.30 மணி வரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT